இலங்கையர்களுக்கு பிரித்தானியா விதித்த தடை .. மகிழ்ச்சியில் ஸ்டார்மர்
இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது தனது அரசாங்கம் தடைகளை விதித்ததில் மகிழ்ச்சி அடைவதாக பிரித்தானிய (UK) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.
தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கடந்த கால அட்டூழியங்களுக்கு ஒப்புதல் மற்றும் பொறுப்புக்கூறல் தேவை என்று ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
மேலும், "ஆயுத மோதலில் கொல்லப்பட்ட மற்றும் பரவலான மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்களை நினைவுகூரும், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மற்றும் பிறருடன் நாங்கள் இணைகின்றோம்.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையின் 16 ஆண்டுகளைக் குறிக்கும் வேளையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அக்காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு மண்டலங்கள் என்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவித்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மீது செல் தாக்குதல் நடத்தியது.
ஆயுத மோதல் முழுவதும், இலங்கை சட்டவிரோதக் கொலைகள், கட்டாயக் காணாமல் ஆக்கப்படல், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளைச் செய்தது மற்றும் மோதலின் இறுதி மாதங்களில் அதன் இராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
கடுமையான தடை
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நால்வர் மீது எமது அரசாங்கம் இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதித்தது. இந்த நடவடிக்கையில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், "நீதி மற்றும் அமைதியைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த புனிதமான நாள் நினைவூட்டுகிறது" என்று ஸ்டார்மர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, கடந்த ஆண்டு பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், 2009 ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், “15ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினத்தை” நினைவுகூரும் ஒரு செய்தியை வெளியிட்டார்.
அதில், "முள்ளிவாய்க்கால் என்பது காணாமல் போனவர்களை நினைவுகூருவதோடு, அட்டூழியங்கள் செய்தவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டும் என்பதையும் நினைவூட்டுவதாக இருக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை தமிழர்கள்
மேலும், "நமது நாடு முழுவதும் உள்ள தமிழ் சமூகங்கள் இந்த புனிதமான நாளைப் பற்றிச் சிந்திக்கும்போது, தமிழ் மக்களுக்கு நீடித்த அமைதி, நல்லிணக்கம் மற்றும் நீண்டகால அரசியல் தீர்வை நோக்கிச் செயல்படுவதற்கான நமது உறுதிப்பாட்டை தொழிலாளர் கட்சி மீண்டும் உறுதிப்படுத்துகிறது" எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில், பிரித்தானிய அரசாங்கம் இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதிகளான சவேந்திர சில்வா, ஜகத் ஜெயசூரியா, கடற்படைத்தளபதி வசந்த கரனாகொட மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி கருணா என அழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் என்போருக்கு எதிராக தடைகளை விதித்தது.
இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த நால்வருக்கும் தடை விதித்தமை தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |