ஊழலுக்கும் மோசடிகளுக்கும் இடமளிக்கும் விதத்தில் செயற்படும் திணைக்கள அதிகாரிகள்
ஊழலுக்கும் மோசடிகளுக்கும் இடமளிக்கும் விதத்திலேயே சில திணைக்கள அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக புலிங்கதேவன் முறிப்பு விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் இன்று (16.02.2025) பொது அமைப்புகளால் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமரிடம், தமது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அவர்கள் கையளித்திருந்த நிலையிலேயே மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த மனுவில், புலிங்கதேவன் முறிப்பு பிரதேசத்தில் உள்ள கமக்கார அமைப்பினால் தொடர்ந்தும் இடம்பெறும் முறைகேடு தொடர்பில் கடந்த 11. 12. 2024 அன்று திகதியிட்டு மாவட்ட அரச அதிபர் பிரதி ஆணையாளர் கமநல அபிவிருத்தி திணைக்களம் கமநலசேவை நிலையம் கண்டாவளை ஆகியோருக்கு கையளித்த கடிதம் தொடர்பில் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமை தொடர்பில் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
புதிய நிர்வாகத் தெரிவு
புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்பின் புதிய நிர்வாகத் தெரிவானது கடந்த 10-12-2024 அன்று உரிய கமநல அபிவிருத்தி சட்டவிதிகளுக்கு அமைய நடைபெறவில்லை என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதாவது மேற்படி புதிய நிர்வாகத் தெரிவிற்கான அறிவித்தல்கள் உரிய முறையில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்படாமலும் முழுமையான விவசாய அங்கத்தவர்களின் பெயர் பட்டியல் பதினான்கு நாட்களுக்கு முன்னர் காட்சிப்படுத்தப்படாமலும் குறித்த தெரிவு முறைகேடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 593 விவசாயிகளை கொண்ட குறித்த பிரதேசத்தில் 519 விவசாயிகளிடமிருந்து அங்கத்துவப் பணம் நுழைவு கட்டணம் என்ற வகையில் தலா ஐநூறு ரூபாவும் வருடாந்த சந்தாப்பணம் என்ற வகையில் தலா நுற்று இருபது ரூபாவும் அறவீடு செய்யப்பட்டுள்ளதுடன் 519 பேரும் முழுமையான அங்கத்துவத்தை பெற்றுள்ளனர்.
ஆனாலும் ஒரு கமக்கார அமைப்பினை தெரிவு செய்ய வேண்டிய விதிகளுக்கு மாறாக முழுமையான விவசாயிகளின் பங்கு பற்றுதலின்றி 112 விவசாயிகளையும் 23 பார்வையாளர்களையும் கொண்டு 269 பேரின் பெயர்களை கொண்டு போலியாக தயாரிக்கப்பட்ட அங்கத்தவர் பட்டியலையும் வைத்து குறித்த தெரிவு முறைகேடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனு கையளிப்பு
இது தொடர்பில் 11-12-2024 திகதி விவசாயிகளாகிய எங்களது ஆட்சேபனையை தெரிவித்து மாவட்ட அரச அதிபர் பிரதி ஆணையாளர் கமநல அபிவிருத்தி திணைக்களம் கமநல சேவை நிலையம் கண்டாவளை ஆகியோருக்கு கடிதங்களை வழங்கிய போதும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
குறிப்பாக அமைப்பின் முன்னைய நிர்வாகமானது நீண்டமாக புனரமைப்பு செய்யப்படாமல் இருந்துள்ளதுடன் தற்போதைய முறைகேடான தெரிவின் மூலம் மீளவும் முன்னைய உறுப்பினர்களே திட்டமிட்டு வகையில் நிர்வாகத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு சிறுபோகச் செய்கையின் போது 18 விவசாயிகளுக்கு சொந்தமான 58.2 சிறுபோக நீர்வரி பங்குகளை மோசடி செய்து விற்பனை செய்தமை இதே காலப்பகுதியில் இந்த பிரதேசத்தை சேர்ந்த விவசாயியான ச. சிவபாதம் என்பவருக்கு சொந்தமான 4712 நீர்வரி இலக்கம் கொண்ட 09.2 ஏக்கர் நீர்வரி பங்கினை அவருக்கு வழங்காது தடுத்து முறைகேடாக பெற்று விற்பனை செய்தமை தொடர்பாக விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக மாவட்ட அதிபர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு மேற்படி விடங்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
இந்நிலையில், குறித்த விடயத்தை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருவவதுடன் இலங்கை நாட்டில் மலர்ந்துள்ள ஊழலற்ற அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து விவசாயிகளாகிய நாங்கள் குறித்த முறைப்பாட்டினை செய்கின்றோம்.
எனவே இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தி ஊழலற்ற வகையில் ஜனநாயக முறைப்படி நல்லதொரு நிர்வாகத்திற்கான தெரிவினை மேற்கொள்வதற்கு வழிவகை செய்யுமாறு தங்களை தயவாக கேட்டுக் கொள்கின்றோம் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமர் ஹரினி அமர சூரிய முல்லைத்தீவில் மக்கள் சந்திப்பிலும் ஈடுபட்டுள்ளார்.
இங்கு உரை நிகழ்த்திய பிரதமர் தமது அரசாங்கத்தில் அதிகளவான பெண்கள் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் உள்ளது.
தங்களது கட்சி சார்பிலேயே அதிகளவான பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் உள்ள பெண் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்தோடு கல்வி விவசாயம் கடற்றொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தமது அரசாங்கத்தில் மக்களுக்கான நியாயமான தீர்வுகள் பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தங்களுடைய கட்சியின் தலைவர் உரிய யோசனைகளை முன்வைத்து அதற்கேற்ற வகையிலே மக்களுக்கான சேவைகளை செய்வார் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலதிக தகவல்: தவசீலன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
