நாட்டு மக்களுக்கு பிரதமர் ஹரிணி விடுத்துள்ள அழைப்பு
95 ஆண்டுகால சர்வஜன வாக்குரிமைப் பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை, இன்று தொழில்நுட்பத்தால் வலுவூட்டப்பட்ட மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் புதிய பாதையில் அடி எடுத்து வைத்துள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், தேர்தல் மின்னணு சேவை அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல் தலையும் முதன்நாள் உறையும் வெளியீடும் இடம்பெற்றன. பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் உரையாற்றுகையில், "ஜனநாயகத்தின் இதயமாகச் சட்டத்தின் ஆட்சியே திகழ்கின்றது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுடன், எந்தவொரு தரப்பினரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல. கடந்த காலத்தில் சீர்குலைந்திருந்த சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பத் தற்போதைய அரசு பல நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சாத்தியமான நடவடிக்கைகள்
அரசியல் தலையீடுகள் இன்றிச் சட்டத்தை நடைமுறைப்படுத்தப் பொலிஸ், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் நீதித்துறைக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் அழுத்தங்களுக்கு அப்பால் குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கும், ஆனால் இதுவரை வாக்களிக்கும் உரிமையற்றிருந்த வெளிநாடவாழ் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை வழங்குவதற்கான வழிமுறைகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
அரச கொள்முதல் செயல்முறைகள் மற்றும் ஒப்பந்தங்கள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழலுக்கான வழிகள் அடைக்கப்பட்டு, அரச சேவையானது மக்களுக்குக் கௌரவமான முறையில் வழங்கப்பட்டு வருகின்றது.
அரசின் 'எவரையும் கைவிடாத' கொள்கையின் கீழ் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலன்புரித் துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, குடிமக்களின் அடிப்படை உரிமைகளும் சம வாய்ப்புகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டில் மக்கள் எடுத்த தீர்க்கமான முடிவு, இன்று வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி மற்றும் உண்மையான மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாக மலர்ந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், இனம், மதம், சாதி வேறுபாடின்றி அனைவருக்குமான நியாயமான இலங்கையை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்வதே அனைவரினதும் இலக்காக இருக்க வேண்டும்." என்றார்.