அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் (VIDEO)
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிவித்தும் அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் டொரிங்டன் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேயிலை மலையில் காணப்பட்ட நான்கு அடி, மூன்று அடி கொண்ட வளர்ந்த புற்களை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும், பதாதைகளை ஏந்தியும் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
நிர்வாகம் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாக இருந்தால் கட்டாயமாக 20 கிலோகிராம் கொழுந்து பறிக்க வேண்டும் என வலியுறுத்தும் நிலையில் அதற்கு குறைவாக கொழுந்து பறித்தால் ஒரு கிலோகிராமிற்கு 40 ரூபா வீத சாரத்தில் சம்பள கணக்கு முடிப்பதால் மாத வருமானம் மிகவும் குறைவடைந்துள்ளதோடு, குடும்ப செலவினை கட்டுப்படுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டதில் ஈடுப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தாம் ஒவ்வொரு நாளும் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உணவு வகைகளை உட்கொள்வதால் திடீரென கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டமையானது தமக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை தோட்ட நிர்வாகம் தேயிலை மலைகளுக்கு உரம், மருந்து தெளித்தல், துப்பரவு செய்தல் போன்ற விடங்களையும் முன்னெடுப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், அரசாங்கம் தமது பிரச்சினைகளை கண்டு கொள்வதில்லை எனவும், தமக்கு உடனடியாக நல்ல தீர்வினை பெற்றுத்தர சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.






