மீண்டும் வருமான வரியை அதிகரிக்க திட்டம் - ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு
பல அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். The Economist ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில்குறைக்கப்பட்ட வருமான வரியை அதே மட்டத்திற்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார் லைன், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய டெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகள், பல அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவது குறித்து பரிசீலித்து வருகின்றன.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு தேவையான ஆழமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும், மாற்றங்கள் தேவைப்படுமாயின் ஆழமான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி அங்கு தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியாக ஒருங்கிணைக்கப்படுவது மிகவும் முக்கியமானது
இலங்கையின் பொருளாதாரம் மீள்வது மட்டுமன்றி போட்டித்தன்மையுடனும் ஏற்றுமதி சார்ந்ததாகவும் இருக்கும் என தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை, ஆசியாவிலுள்ள ஏனைய நாடுகளுடன் இலங்கை பொருளாதார ரீதியாக ஒருங்கிணைக்கப்படுவது மிகவும் முக்கியமானது எனவும், ஆசியான் உறுப்பினர்கள் மற்றும் RCEP அங்கத்தவர்களுடன் நெருக்கமான உறவுகளை கட்டியெழுப்ப எதிர்பார்த்துள்ளதாகவும், பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தை கட்டியெழுப்புவதற்கு செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதையெல்லாம் சாதிக்க வேண்டுமானால், நாடாளுமன்றம் கடினமான சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும் என்று The Economist கூறுகிறது.
பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே 2025 க்குப் பிறகு அடுத்த தேர்தலைக் கவனித்து வருகின்றனர், வலிமிகுந்த வரி உயர்வுகள் மற்றும் செலவுக் குறைப்புகளுக்கு ஜனாதிபதியைக் குற்றம் சாட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று The Economist கூறுகிறது.
இதேவேளை, 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அதிக வருமானம் பெறும் நாடாக மாற்றி புதிய சிங்கப்பூராக மாற்றுவதற்கு ஜனாதிபதி தெளிவான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறது.