மட்டக்களப்பில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன திட்டம்
மட்டக்களப்பில் (Batticaloa) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன திட்டம் குறித்து ஆராய்வது தொடர்பிலான கலந்துரையாடல் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் (Pillayan) தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, இன்று (27.05.2027) நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பில் விவசாய உற்பத்திகளை அதிகரிக்கும் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன வேலைத்திட்டத்தில் (CSLAP) உலக வங்கியின் நிதியுதவி ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய நீர்ப்பாசன மேம்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
களவிஜயம்
இருப்பினும், கடந்த கால பொருளாதார பிரச்சினை மற்றும் வனவள பரிபாலன திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்களின் பிரச்சினை காரணமாக குறித்த திட்டங்களில் தாமதங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் இந்த விடயம் தொடர்பிலான கலந்துரையாடல் கடந்த மே மாதம் 11ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது, இந்த திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் மேற்படி பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளுக்கு நேரடி களவிஜயம் மேற்கொண்டு ஆராய்வது என தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.
இதற்கமைய, இந்த காரணங்களுக்கான பிணக்குகள் தொடர்பிலும் திணைக்களம் சார்ந்த விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக குறித்த களவிஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, நீர்ப்பாசன மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வரும் புலுட்டுமானோடை குளம், இரைச்சகல் குளம் வெப்பத்தாவெளி குளம் குறுக்கனாமடு அணைக்கட்டு போன்ற வேலைதளங்களுக்கு இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் நேரடி களவிஜயத்தினை முன்னெடுத்துள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை
இதன்போது, பணிகளை முடிவுறுத்துவதற்கு தடையாக இருந்த விடயங்கள் தொடர்பில் நேரில் ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.
மேலும், இந்த பணிகளை விரைவுபடுத்தி பருவமழை ஆரம்பிக்கின்ற காலப்பகுதிக்கு முன்னர் முடிவுறுத்தி விவசாய தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான முனைப்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதேவேளை, இந்த பகுதிகளில் புலுட்டுமானோடை மற்றும் இரைச்சகல் குளங்களின் மேலதிக நீர் கொள்ளளவை அதிகரிக்கும் பொருட்டு 113.7 மில்லியன் செலவில் குளக்கட்டை புனரமைத்தல் புதிய துருசு மற்றும் கால்வாய் அமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், மேலதிக நீரை வெளியேற்றுவதற்கான வான் கதவுகள் அமைத்தல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது.
புனரமைப்பு பணிகள்
அத்தோடு இரைச்சகல் குளத்தின் குளக்கட்டை மேலும் நீளமாக்குதல் தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மேற்குறிப்பிட்ட குளங்களின் நீர்ப்பாசன திட்டத்தின் ஊடாக இதுவரை 750 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இக்குளங்களின் மேலதிக புனரமைப்பு காரணமாக மேலும் 250 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்தோடு, வெப்பத்தாவெளி குளமானது 41 மில்லியன் செலவில் புனரமைக்கப்படுவதுடன் குளத்தினுடைய குளக்கட்டு உயர்த்தப்பட்டு புதிய நீர்ப்பாசன வாய்கள் என்பனவும் அமைக்கப்பட்டு வருகின்றன.
எனவே, இந்த குளத்தினுடைய மேலதிக புனரமைப்பு காரணமாக நீர்ப்பாசனத் திட்டத்தினூடாக இதுவரை 40 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மேலும் 40 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை இதனூடாக அதிகரிக்கப்படவுள்ளது.
நீர்ப்பாசன நடவடிக்கை
மேலும், 37 மில்லியன் செலவில் குறுக்கனாமடு அணைக்கட்டு, நீர்ப்பாசன கால்வாய் என்பனவும் புனரமைக்கப்படுவதுடன் இதனூடாக 80 ஏக்கர் சிறு சிறுபோக செய்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதாவது, கடந்த 2013ஆம் ஆண்டு 55 மில்லியன் செலவில் கட்டி முடிக்கப்பட்ட குறுக்கனாமடு அணைக்கட்டு ஊடாக குறித்த குறுக்கனாமடு குளத்திற்கான மேலதிக நீர் கிடைக்க பெறுவதோடு, மியாங்கல் கண்டத்துக்கான மேலதிக நீர்ப்பாசனமும் கிடைக்கப்பெறுகிறது. எனவே, இதனூடாக குறித்த கண்டத்தில் சிறுபோக செய்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த கள விஜயத்தின் போது நீர்ப்பாசன மாகாண பணிப்பாளர் இராஜகோபாலசிங்கம் செங்கலடி பிரதேச செயலாளர், அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |