பிள்ளைகளைக் கொன்ற பிள்ளையான் குழு! சிரேஷ்ட ஊடகவியலாளர் பகீர் தகவல்
பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழு செய்த ஈவிரக்கமற்ற படுகொலைகள் தொடர்பாக கிழக்கில் 'சிவந்த சுவடுகள்' என்ற நூலில் விபரிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. துரைரெத்தினத்தினால் எழுதப்பட்டு விரைவில் வெளிவர இருக்கும் அந்நூலின் ஒரு பகுதி இது.
'பிள்ளையான குழு' என்ற பெயரில் கிழக்கில் இடம் பெற்ற பல்வேறு படுகொலைகளை உலகின் பார்வைக்குக் கொண்டுவருகின்றார் இரா.துரைரெத்தினம்.
இன்று பகுதி-1
குழந்தைகளையும் விட்டு வைக்காத பிள்ளையான் குழு
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து 2007 மே 18 திகதி அமெரிக்கா வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பட்ட செய்தியில் , இராணுவம் செய்ய முடியாத “வேலைகளை” செய்யும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களின் வேலைகளில் தலையிட வேண்டாம் என்று பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச இலங்கை இராணுவ தளபதிகளுக்கு உத்தரவிட்டதை அமெரிக்கா தூதுவராலயம் அம்பலப்படுத்தி இருந்தது.
வடக்கு கிழக்கில் தமிழ் ஆயுதக்குழுக்கள் செய்த படுகொலைகள் மனித உரிமை மீறல்களை இராணுவமோ பொலிஸாரோ கண்டுகொள்வதில்லை.
அப்படி ஒரு சில சம்பவங்களில் சிலர் கைது செய்யப்பட்டாலும் அக்கொலைகளின் சூத்திரதாரிகளை பாதுகாக்கும் நோக்குடனேயே செயற்பட்டனர்.
முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழு செய்த படுகொலைகள் மனித இனத்தால் அல்ல அரக்க இனத்தாலும் செய்ய எண்ணாத கோரக்கொலைகள் என வர்ணிக்கப்படுகிறது.
தமிழ் முஸ்லீம் ஆயுதக்குழுக்களும் அரச படைகளும் ஈவிரக்கமற்ற படுகொலைகளை செய்தார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆனால் பச்சிளம் குழந்தைகளை பணத்திற்காக கடத்திச்சென்று வெட்டிப்படுகொலை செய்த இரத்தக்கறை பிள்ளையான் கையில் தான் உள்ளது.
திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் இரு சிறுமிகள் கோரமாக கொல்லப்பட்ட சம்பவங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
திருமலையில் சிறுமி வத்சாவுக்கு நடந்த கொடூரம்
திருகோணமலையிலிருந்து 3 மைல் தொலைவிலுள்ள பாலையுற்று என்ற கிராமத்தில் வசிக்கும் ரெஜி (அப்போது அவர் கட்டாரில் வேலை செய்தார்) கிருபராணி தம்பதியரின் புதல்வி வத்சா (வயது 6), புனித மரியாள் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியாக படித்துக்கொண்டிருந்தார்.
அவ் வேளையில் 11.03.2009 அன்று கடத்தப்பட்டு, மிக கோரமாக கொலை செய்யப்பட்டு, உடல் துண்டாடப்பட்ட நிலையில் ஒரு சாக்கில் மூட்டையாக கட்டப்பட்டு வீதியோரத்தில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பாலையுற்றில் வசிக்கும் வத்சா வீட்டிற்கு ரி.எம்.வி.பி உறுப்பினரான மேவின் என்ற இளைஞர் நன்றாகவே சிறிது காலம் பழகியுள்ளார். இவருக்கு இன்ரநெற், கொம்பியுட்டர் கையாளத் தெரியுமென்ற நிலையில் அவ்வீட்டினருடன் இதைக் காரணம்காட்டியே நண்பராக பழகியுள்ளார்.
வத்சா இந்நபரை 'கொம்பியூட்டர் மாமா' என்றே அழைப்பார்.
வத்சா நாளாந்தம் 3 மைல் தூரத்திலுள்ள பாடசாலைக்கு முச்சக்கர வண்டியிலேயே சென்று வந்தார்.
சம்பவம் நடந்த அன்று மேவின் பாடசாலையிலிருந்து வத்சாவை அழைத்துச் செல்ல முற்பட்ட போது அப்பாடசாலையின் ஆசிரியர் தடுத்தார்.
‘எனக்கு இந்த மாமாவைத் தெரியும், இவர் எங்கள் வீட்டு மாமா தான்.. எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் கொம்பியூட்டர் மாமா தான்.." என வத்சா கூறியதால் மேவினுடன் குழந்தை செல்லவதற்கு ஆசிரியர் அனுமதித்தார்.
ஆனால் சில மணிநேரத்தில் தாயார் சிறுமியைக் காணவில்லையென தேடத்தொடங்கினார்.
பாடசாலை நிர்வாகம் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
ஆர்ப்பாட்டங்கள்
இந்நிலையில் வத்சாவைக் கடத்திய 'பிள்ளையான் குழுவினர்' தொலைபேசியில் சிறுமியின் தாயாரினைத் தொடர்பு கொண்டு கப்பமாக 3 கோடி ரூபா பணம் கேட்டனர்.
பணம் தராவிட்டால் குழந்தையை கொல்லுவதாக மிரட்டியும் உள்ளனர். தொலைபேசி மூலம் தாயார் மிரட்டப்பட்டு மிக அலைக்கழிக்கப்பட்டு உள்ளார்.
அதன்பின் தாயார் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என கடத்தல்காரர்களான பிள்ளையான் குழுவிடம் பேசி இறுதியில் 50 லட்சம் பணம் தருவதாக தாயார் ஒப்புக்கொண்டார்.
சிறுமியை விடுவிக்குமாறு கோரி பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
வத்சாவை பாடசாலையில் இருந்து கடத்திச் சென்ற மேவின் என்ற ரி.எம்.வி.பி பிள்ளையான் குழு உறுப்பினர் அக்கொலைக்குழுவைச்சேர்ந்த அறுவரிடம் குழந்தையை கையளித்த நிலையில் எல்லோருமாக சேர்ந்து குழந்தையை ஒளித்து வைத்திருந்தனர்.
EXCLUSIVE: இராணுவ அதிகாரி கைதால் அச்சமடைந்த பிள்ளையான்! ஓட்டுனர் கூறிய பல இரகசியங்கள்:- முன்னாள் சகா அதிரடி வாக்குமூலம் (Audio)
இதில் ஒரு கட்டத்தில் சிறுமி அடம் பிடிக்கவே சிறுமியின் காலுறையைக் கழட்டி வாயினுள் அடைத்து கை கால்கள் கட்டப்பட்டு, பின்னர் பிளாஸ்ரர் ஒட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் வத்சா மரணம் அடையவே சிறுமியைக் கோரமாக வெட்டி சாக்குப் பையில் கட்டி “புதிய சோனத்தெரு” (பள்ளிவாசலுக்கு முன் வீதியில்) வாய்க்கால் ஒன்றினுள் குப்பையுடன் குப்பையாக போட்டுள்ளனர்.
வத்சா கொல்லப்பட்ட பின்னரும் பிள்ளையான் குழுவினர் வத்சாவின் தாயாரைத் தொடர்ந்தும் மிரட்டி பணத்தைப் பெற்றுக்கொள்ள முற்பட்டனர்.
குப்பைகளுடன் போடப்பட்ட இந்தப்பை தேடுவாரற்ற நிலையில் 3 நாட்களாக வீதியோர வாய்க்காலில் மழையிலும் தண்ணியிலும் கிடந்தது. 3வது நாள் “நகரசுத்தி தொழிலாளி” வீதியைத் துப்பரவு செய்கையில் சாக்குப் பையை கண்டு அதனை அகற்ற எடுத்த போது கையொன்று தெரியவே அத்தொழிலாளி பதற்றமடைந்து பொலிஸிற்கு தகவல் வழங்கினார்.
பொலிஸ் விசாரணைகளில் அது காணாமல் போய் தேடப்பட்ட வத்சாவின் உடல் என்பது நீதிவான் இளஞ்செழியன் முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டது.
பொலிஸாருக்கு புகார் கொடுத்த வத்சாவின் பாடசாலை “கன்னியாஸ்திரிகள்” இருவர் அதனை உறுதிப்படுத்தினர்.
நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு
பிரேத பரிசோதனையின் பின் வத்சாவின் உடல் தாங்கிய பேழை சீல்வைக்கப்பட்டது. வத்சாவின் உடல் படுகொலை செய்யப்பட்ட பின் துண்டுகளாக வெட்டப்பட்டு வாய்க்காலில் போடப்பட்டு மூன்று நாட்களாக அனாதரவாக நனைந்து கிடந்ததால் மிகச் சிதைவடைந்து சீரழிந்து அகோர நிலையில் கிடந்துள்ளது.
இந்நிலையிலேயே பேழை “சீல்” வைக்கப்பட்டு குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு நீதிபதி இளஞ்செழியன் பொலிஸாருக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்தார்.
ரி.எம்.வி.பி உறுப்பினர் மேவின் தான் இச்சிறுமியை கடத்தி சென்றார் என விசாரணையில் தெரியவந்ததை அடுத்து மேவினையும் அக்கொலையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய குற்றவாளிகளையும் கைது செய்யுமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார்.
நீதிபதியின் கடுமையான உத்தரவை அடுத்து குற்றவாளிகள் கைதானார்கள்.
ஒருவர் பெயர் ஒப்பின் மேர்வின். இவர் ரி.எம்.வி.பி என்ற பிள்ளையான் தலைமையிலான கட்சியின் திருகோணமலைப் பொறுப்பாளர்.
இரண்டாவது சந்தேக நபர் வரதராஜன் ஜனாரதன் (ஜனா குமரன்) இவரை பிள்ளையான் குழு உறுப்பினர்கள் 'சுரங்' என்றும் அழைப்பார்கள். ரி.எம்.வி.பி அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலாளர்.
இவர்களுடன் நிசாந்தன் மற்றும் றெஜினோல்ட் போன்றோரும் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள்.
இவர்கள் அனைவரும் பிள்ளையானின் நேரடி வழிகாட்டலிலேயே செயற்பட்டு வந்தனர்.
சிறுமியின் கடத்தலில் அப்பொழுது கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிள்ளையானுக்கு நேரடித் தொடர்பிருப்பதாக கருணா குழுவினர் குற்றம் சாட்டினர். அப்பொழுது கருணா சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவராக பதிவியேற்றிருந்ததுடன், பிரதியமைச்சராகவும் இருந்தார்.
கருணாவின் ஊடகப் பேச்சாளராக இருந்த இனியபாரதி, பிள்ளையான் மீதான அந்தக் குற்றசாட்டை பகிரங்கமாகச் சுமத்தியிருந்தார்.
பதிலுக்கு, அப்பொழுது கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிள்ளையானின் ஊடகப் பேச்சாளர் அசத் மௌலானா, ரி.எம்.வி.பி உறுப்பினர்களை வைத்து கருணாவே அந்தக் கடத்தல்களைச் செய்ததாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த இழுபறி ஒருபக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்க, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நான்கு பேரும் திடீரென்று சிறிலங்கா காவல்துறையினரால் கொல்லப்பட்டார்கள்.
ஒருவர் தப்பியோட முற்பட்ட போது தம்மால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் மற்றுமொரு சந்தேக நபர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், மற்றைய இருவரும் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டைகளில் கொல்லப்பட்டுவிட்டதாகவும் காவல்துறையினர் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
அதாவது இந்த சிறுமியின் கடத்தலின் பின்னணியில் பிள்ளையான் இருந்தார் என்ற உண்மையை கூறக்கூடிய நிலை இருந்த சாட்சிகள் நான்கு பேருமே சிறிலங்கா காவல்துறையின் பாதுகாப்பில் இருந்த நேரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார்கள்.
பிள்ளையானின் நேரடி வழிகாட்டலில் இக்கொலை நடந்தது என்ற உண்மை வெளிவரக் கூடாது என்பதற்காக கைது செய்யபபட்ட நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்.
கோட்டாபயவின் திரிபோலி கொலை குழுவால் நாங்களும் கொல்லப்படுவோமா.. சபையில் அச்சம் வெளியிட்ட சாணக்கியன்(Video)
மட்டக்களப்பில் சிறுமி தினூசிகா படுகொலை
மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஸ்ட்ட வித்தியாலயத்தில் மூன்றாம் ஆண்டு கல்வி கற்றுக்கொண்டிருந்த தினூசிகா சதீஷ்குமார் என்ற எட்டு வயதுச் சிறுமி 28.04.2009 அன்று கடத்தப்பட்டு 30 இலட்சம் ரூபாய் கப்பம் கேட்கப்பட்ட நிலையில், அவளது உடல் 02.05.2009 அன்று கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது.
'பிள்ளையான் குழுவே' தமது குழந்தையின் மரணத்திற்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
'குற்றவாளிகளை கைது செய்யவேண்டும்', 'விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என்று கூறி மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலை மாணவர்கள் 9 நாட்களாக தொடர் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டார்கள்.
முன்னாள் புளொட் குழு உறுப்பினரும், பின்னர் பிள்ளையான் குழுவில் இணைந்து செயற்பட்டவருமான கந்தசாமி ரதீஸ்குமார், மற்றும் சுனாமிக்கண்ணன் என்று அழைக்கப்படும் ரி.எம்.வி.பி அமைப்பின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளரான திவ்யசீலன் போன்றோர்களின் பெயர்கள் சிறுமியின் கடத்தில் சம்பந்தப்பட்டு பேசப்பட்டன.
இந்த படுகொலையாளிகளுக்கு தலைமை தாங்கியவர் புளொட் மோகன்குழுவைச்சேர்ந்த ரதீஸ்குமார் என்பவர் என்றும் இவர் பின்னர் பிள்ளையான் குழுவுடன் சேர்ந்து இயங்கி வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவர் மட்டக்களப்பு இராணுவ புனலாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த லெப்.கேணல் நிஜாம் முத்தலிப் என்ற இராணுவ அதிகாரிக்கு கீழ் இயங்கி வந்தார்.
இந்த சிறுமியின் கடத்தல் மற்றும் படுகொலை தொடர்பாக கந்தசாமி ரதீஸ்குமார் என்பவர் உட்பட 4பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நான்கு பேரும் பின்னர் ஊறணியில் வைத்து காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த படுகொலையின் பின்னணியில் பிள்ளையான் நேரடியாக தொடர்பு பட்டிருந்தார் என்ற விபரங்கள் அம்பலத்திற்கு வராமல் இருப்பதற்காகவே அந்த நேரடிச் சாட்சியங்கள் அழிக்கப்பட்டதாக மக்கள் பேசிக்கொண்டார்கள்
திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் பிள்ளையானின் நேரடி வழிகாட்டிலில் செயற்பட்ட பிள்ளையான் குழுவினரால் அப்பாவி பச்சிளம் குழுந்தைகள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர்.
ஆனால் இந்த கோரக்கொலைகளின் சூத்திரதாரிகள் இன்று புனிதர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
'பிள்ளையான் குழு' செய்த கொடூரமான மற்றொரு படுகொலை நாளை 'சொன்னாலும் குற்றத்தில்' வெளிவருகின்றது