நாமல் தனிமைப்படுத்தல் சட்டங்களை பின்பற்றுவார் என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நம்பிக்கை
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தனிமைப்படுத்தல் சட்டங்களைப் பின்பற்றுவார் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன இது குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாமல் ராஜபக்ச ஏனையோருக்கு முன்னுதாரணமாக டுபாய் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் போது 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் அனைத்து இலங்கையர்களும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகின்றனர்.
ஹோட்டல்கள் அல்லது இராணுவத்தினால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
அரசியல்வாதிகள் சட்டங்களை மீறிச் செயற்பட்டால் சட்டங்கள் தொடர்பிலான மக்களின் நம்பிக்கை குறையும் எனத் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் நாமல் ராஜபக்சவும், ராஜாங்க அமைச்சர் டி.வீ. சானக்கவும் தற்பொழுது டுபாயில் நடைபெறும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.