கச்சா எண்ணெய் இறக்குமதியை விட பெட்ரோல் இறக்குமதி இலாபகரமானது : எரிசக்தி அமைச்சர்
டொலரை முகாமைத்துவம் செய்யும் நடவடிக்கையில், கச்சாய் எண்ணெய் இறக்குமதி செய்வதை விட பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்வது இலாபகரமானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு கிடைக்கும் எரிபொருள் மூலம் 5 ரூபாய் இலாபம் கிடைக்கின்றது. எனினும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி, சுத்தகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு குறைவாக அறவிடப்படுவதால், 15 ரூபாய் இலாபம் கிடைக்கின்றது.
பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்யும் போது நேரடியாக ஒரு பீப்பாய்க்கு 93.65 டொலர்கள் செலவாகின்றது. கச்சாய் எண்ணெயை இறக்குமதி செய்யும் போது ஒரு பீப்பாய்க்கு 197 டொலர்கள் என்ற இரண்டு மடங்கு பணம் செலவாகிறது.
கச்சாய் எண்ணெய் சுத்திகரித்த பின்னர் கிடைக்கும் இயந்திர எண்ணெய் மற்றும் செப்தா எண்ணெய் என்பதை தற்போது பயன்படுத்தப்படுவதில்லை. பெட்ரோல் மற்றும் டீசலை நேரடியாக இறக்குமதி செய்வது கூடுதல் இலாபத்தை தரும்.
கச்சாய் எண்ணெய் சுத்திகரிக்கும் போது, இயந்திர எண்ணெய் மற்றும் நெப்தா எண்ணெய் 37 வீதம் மீதமாகும். நிலவும் அதிகமான மழையுடன் கூடிய காலநிலையால், மின்சார சபை இந்த கழிவு எண்ணெய்யை கொள்வனவு செய்வதில்லை.
இதனால், 13 ஆயிரத்து 500 தொன் தாங்கிகளில் தேக்கப்பட்டுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு என்பது காலம் கடந்த முறைமை. ஒரு பீப்பாய் கச்சாய் எண்ணெயில் 14 லீற்றர் பெட்ரோலும் 29 லீற்றர் டீசலையும் உற்பத்தி செய்ய முடியும்.
ஒரு பீப்பாய் பெட்ரோல் மற்றும் டீசலை உற்பத்தி செய்ய 2.32 பீப்பாய் கச்சாய் எண்ணெய் தேவைப்படுகிறது. பெட்ரோல் ஒரு பீப்பாய் 95 டொலருக்கும், டீசல் ஒரு பீப்பாய் 93 டொலருக்கும் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.