சிறுவர்களுக்கு எதிரான தவறான நடத்தைகளுக்கு நீதி கோரி எதிர்க்கட்சித் தலைவரிடம் மனு கையளிப்பு
தீர்க்கப்படாத சிறுவர் துர்நடத்தை முறைப்பாடுகளுக்குத் துரித நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துஷ் விக்ரமநாயக்க தலைமையிலான குழுவினர் திரட்டிய 40 ஆயிரம் கையெழுத்துகள் அடங்கிய மனு இன்று(09.07.2026) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மனுவைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
சிறுவர் துர்நடத்தைகளுக்கான மனு
இந்த மனுவில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹிணி கவிரத்ன, சமிந்தரானி கிரியெல்ல உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக, துஷ் விக்ரமநாயக்க தலைமையிலான குழுவினர், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து, இந்த விடயத்தின் முக்கியத்துவம் மற்றும் நிலுவையில் உள்ள முறைப்பாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






