டெலிகிராம் செயலிக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட மனு தள்ளுபடி
மருத்துவப் படிப்புக்கான நீட் பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து, இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை புதுடெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த மே மாதம் நடந்த நீட் பரீட்சை முறைகேடுகள் காரணமாக இரத்து செய்யப்பட்ட நிலையில், வரும் ஜூன் 21 அன்று பரீட்சை நடத்தப்பட உள்ளது.
இந்தச் சூழலில், டெலிகிராம் குரூப்களில் போலியான மற்றும் கசிந்த வினாத்தாள்களைப் பகிர்ந்து மாணவர்களிடம் பண மோசடி செய்வதாக தேசிய பரீட்சை முகமை மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் குற்றம் சாட்டியது.
தற்காலிகத் தடை
இதனடிப்படையில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69A-இன் கீழ், ஜூன் 22 வரை டெலிகிராம் செயலியை முடக்கவும், ஜூன் 30 வரை அதன் 'மெசேஜ் எடிட்டிங்' வசதியை முடக்கவும் அரச உத்தரவிட்டது.

இந்தத் தடையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் நீதிமன்றத்தை நாடிய நிலையில், "அரசின் இந்த நடவடிக்கை சட்ட நடைமுறைகளின்படியே எடுக்கப்பட்டுள்ளது.இதில் எவ்வித தவறும் இல்லை" என்று நீதிபதி தேஜாஸ் கரியா தீர்ப்பளித்துள்ளார்.
இந்தியாவின் 15 கோடிக்கும் அதிகமான பயனாளர்களை இந்தத் தடை பாதிப்பதாக டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் விமர்சித்துள்ள போதிலும், மாணவர்களின் நலன் மற்றும் பரீட்சை பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்தத் தற்காலிகத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.