பசிலுக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்
அந்நிய செலாவணி தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதற்கான இடைக்கால தடையுத்தரவு கோரி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவில் நீதி அமைச்சர் , மத்திய வங்கி ஆளுநர், மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சேவை வழங்கி வருவதாகவும் அவர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்களில் கட்டணங்கள் செலுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் வெளிநாட்டு நாணய வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றிக் கொள்ளும் வர்த்தமானி அறிவிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கின் நாணயப் பெறுமதியை அவரின் விருப்பத்திற்கு மாறாக வங்கியினால் வேறு நாணய அலகாக மாற்றிக்கொள்ள முடியாது எனவும் அது சட்டவிரோதமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் வங்கி கணக்குகளுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்கள் இலங்கை நாணயப் பெறுமதியில் மாற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வாடிக்கையாளர்களின் விருப்பமின்றி வெளிநாட்டு நாணய பெறுமதி, இலங்கை ரூபாவாக மாற்றப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.