கொழும்பு புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தனக்கும் மேலும் பலருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை தடுக்குமாறு கோரி முன்னாள் கடற்படை தளபதி உரிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
150 பேரிடம் வாக்குமூலங்கள்
இதன்படி, இந்த மனு, நீதியரசர்கள் மேனகா விஜேசுந்தர, சம்பத் பி. அபேகோன், மாயாதுன்னே கொரியா மற்றும் சமத் மொராயிஸ் ஆகியோர் அடங்கிய ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் 2024 செப்டெம்பர் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கின் விசாரணைகள் கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து, 150 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும் 11 இளைஞர்களை கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில் தனது கட்சிக்காரர் குற்றவாளி என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை பொலிஸார் வெளிப்படுத்தவில்லை என்று மனுதாரரின் சட்டத்தரணி இந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |