முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையை அங்கீகரிக்க கோரி பிரித்தானிய பிரதமருக்கு மனு
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு, தமிழ் இனப்படுகொலையை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கக் கோரியும், ஏனைய யுத்த குற்றவாளிகள் மீதும் தடையை விதிக்கவும், நீதியை நிலைநிறுத்த நடவடிக்கைகள் எடுக்கவும் வலியுறுத்தி மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை சமர்ப்பிக்கும் செயற்பாடானது, இனப்படுகொலை தடுப்பு மற்றும் தண்டிப்புக்கான சர்வசே மையத்தினால் (International Centre for Prevention and Prosecution of Genocide - ICPPG) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சர்வதேச நீதிமன்றம் ஒன்றை நிறுவ
இலங்கை இராணுவத்தின் திட்டமிட்ட சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ICPPGயின் தொண்டர்கள் கையொப்பமிடப்பட்ட இந்த மனுவினை பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து கையளித்துள்ளனர்.
மனுவின் முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு:
1. இலங்கையில் நடைபெற்ற தமிழினப்படுகொலையை பிரித்தானியா உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்.
2. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பிரேரிக்க வேண்டும்.
3. தமிழர்களுக்கு எதிரான யுத்த குற்றம் செய்த ஏனையவர்களுக்கு பயணத்தடை மற்றும் சொத்துத் தடைகள் விதிக்க வேண்டும்.
4. போர்குற்றவாளிகள் தூதுவர்கள் ஆகுவதற்கும் அதிகாரப்பூர்வ பதவிகள் வகிப்பதற்கும் தடையிட வேண்டும்.
5. சார்பற்ற சர்வதேச விசாரணையை அமைக்க பிரித்தானியா முன்னெடுப்பாக செயல்பட வேண்டும்.
6. தமிழினப்படுகொலையை விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றம் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
