தள்ளுவண்டியில் பொருட்களை ஏற்றிச்சென்ற நபர் கைது
அலுத்கம பிரதேசத்தில் தள்ளுவண்டியில் (wheelbarrow) பொருட்களை ஏற்றிச்சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதிலும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய இன்றைய தினம் பயணத்தடை தளர்த்தப்பட்டிருந்தது.
வாகனங்களில் செல்லக்கூடாது, அருகாமையில் உள்ள கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என பல்வேறு கெடுபிடிகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வாகனங்களில் செல்லக் கூடாது என்ற உத்தரவினை விமர்சனம் செய்யும் வகையில் இன்றைய தினம் நாட்டின் சில பகுதிகளில் தள்ளுவண்டிகளில் சிலர் பொருட்களை கொள்வனவு செய்து ஏற்றிச்செல்லும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
அலுத்கம பிரதேசத்தில் குறித்த நபரும் இவ்வாறு தள்ளுவண்டியில் பொருட்களை ஏற்றிச்செல்லும் காட்சி இன்று சமூக ஊடகங்களில் வைரலாகியிருந்தது.
எனினும் குறித்த நபர் முகக் கவசம் அணிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக குற்றம் சுமத்தி குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.