பணிக்கு சேர்ந்து மூன்று நாட்களில் நபர் செய்த செயல்: பேரதிர்ச்சிக்குள்ளான பெண் உரிமையாளர்!
கொழும்பு - பம்பலப்பிட்டியில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில், சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த கடையில் பணி புரிந்த நபர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் போது, சந்தேகநபர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த விற்பனை நிலையத்தில் பணிக்கு சேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அங்கு சந்தேகநபர் சுமார் 5 இலட்சம் இலங்கை ரூபாய் உட்பட அமெரிக்க டொலர்கள், இந்திய ரூபாய், சிங்கப்பூர் டொலர்கள், மலேசிய ரிங்கிட்ஸ் மற்றும் யூரோக்கள் என்பவற்றை கொள்ளையிட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணை
மூன்று நாட்களுக்கு முன்னர் தொலைபேசி கடைக்குச் சென்றிருந்த சந்தேகநபர், தனது கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.
அப்போது, விற்பனை நிலையத்தின் உரிமையாளரான பெண்ணிடம் பணிந்து, தான் அனாதை இல்லத்தில் வளர்ந்ததாகவும் தனக்கு யாரும் இவ்லை என்றும், எதாவது வேலையும் தருமாறும் கெஞ்சியுள்ளார்.
சந்தேகநபர் மீது ஏற்பட்ட அனுதாபத்தின் அடிப்படையில் குறித்த பெண் சந்தேகநபரை அந்த விற்பனை நிலையத்தில் வேலைக்கு அமர்த்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர், சந்தேகநபர் தனது ஆடைகளை எடுத்துக்கொண்டு அன்றைய தினமே வேலைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் பெண், சந்தேகநபரை வெள்ளவத்தை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்குள்ள அறையில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
விற்பனை நிலையத்தை திறந்த சந்தேகநபர்
அதன் பிறகு, சந்தேகநபர் மிகவும் திறமையாக வேலை செய்து விற்பனை நிலைய பெண்ணின் இதயத்தை கவர்ந்துள்ளார்.
சம்பவத்தன்று, பெண் தனது இளைய மகளை சந்தேகநபருடன் விற்பனை நிலையத்திற்கு அனுப்பிவிட்டு புறக்கோட்டை பகுதிக்குச் சென்றுள்ளார்.
அதன்படி நேற்று (27.06.2023) காலை 9 மணியளவில் மகளும், சந்தேகநபரும் விற்பனை நிலையத்தைத் திறந்துள்ளனர். பின்னர் மகள் உணவருந்துவதற்காக வெளியில் சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.
அந்த நேரத்தில் குறித்த பெண் தனது மகளுக்கு தொலைபேசியில் அழைத்துள்ள நிலையில், மகள் பதிலளிக்காததால் சந்தேகநபரின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம்
அதற்கும் எந்த பதிலும் வராததால், அருகில் உள்ள விற்பனை நிலையத்திற்கு தொலைபேசி வாயிலாக அழைத்து மகளிடம் கொடுக்குமாறு கோரியுள்ளார்.
பின்னர், அந்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர், பெண்ணின் விற்பனை நிலையத்திற்குச் சென்று தேடியபோது, அங்கு யாரும் இல்லை என அவரிடம் தொலைபேசியில் கூறியுள்ளார்.
அதன்பின், சந்தேகமடைந்த குறித்த பெண் விற்பனை நிலையத்திற்கு விரைந்து சென்றுள்ளார்.
விற்பனை நிலையத்திற்குச் சென்ற போது மகள் மட்டும் இருந்ததையும், சோதனையிட்ட போது, கடையின் ஒரு அறையில் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் முழுவதும் காணாமல் போயுள்ளதாகவும் குறித்த பெண் பொலிஸாாிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அங்கிருந்த அனைத்து பணத்தின் மொத்த பெறுமதி ஒன்றரை கோடி ரூபாய் என்று அந்த பெண் கூறியுள்ளார்.
இதனடிப்படையில் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |