பௌத்த மயானத்தில் சட்டவிரோதமாக கற்பாறைகளை கொட்டிய ஒப்பந்ததாரருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுர சிங்கள மயானத்துக்குள் சட்டவிரோதமாக கற்பாறைகளை கொட்டிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு நேற்றையதினம் (26.10.2023) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த சிங்கள பௌத்த மதத்தைச் சேர்ந்வர்கள் உயிரிழந்தால் அவர்களை அடக்கம் செய்வதற்காக அந்த பகுதியிலுள்ள விகாரைக்கு எதிராக ஒதுக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுவந்து மயானத்தினுள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அந்த பகுதி வீதி நிர்மாணபணிகளை செய்துவந்த ஒப்பந்ததாரர் வீதியை அகழ்ந்த மணல் கற்பாறைகளை கனகரக வாகனத்தில் கொண்டு சென்று சட்டவிரோதமாக மயானத்துக்குள் கொட்டியுள்ளனர்.
இதனையடுத்து இது தொடர்பாக ஜெயந்திபுர விகாரை விகாராதிபதி பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்த நிலையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை தெரிவித்து மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ண தேரர் நேற்றைய தினம் சென்று மீண்டும் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் குறித்த மயானபகுதிக்கு சென்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆட்கள் தான் இந்த கொடூரமான வேலையை செய்துள்ளனர் என தெரிவித்து தென்பகுதியில் உள்ள தமிழர்களின் தலையை வெட்டப்போவதாகவும் புலிகள் என தெரிவித்து வீதியில் சத்தமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து சட்டவிரோதமாக மயானத்தில் கற்பாறைகளை கொட்டிய வீதி அபிவிருத்தி ஒப்பந்ததாரரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவரை எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
