நிரந்தர பாதசாரி கடவை அமைக்கப்பட வேண்டும்: ஜிப்பிரிக்கோ கோரிக்கை!
வலிகாமம் தென்மேற்கு பிரதேசபை எல்லைக்குட்பட்டதும் வலிகாமம் வலய பாடசாலையுமான பிரான்பற்று கலைமகள் வித்தியாலயம் சண்டிலிப்பாய்-பண்டத்தரிப்பு பிரதான வீதிக்கருகே நிரந்தர பாதசாரி கடவை அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் அ.ஜோன் ஜிப்பிரிக்கோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வீதி ஐறோட் திட்டத்தின் கீழ் காபெற் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்ட போதும் இப்பாடசாலை அருகே பாதசாரி கடவையொன்று அமைக்கப்படாததால் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் வாகன நெரிசல் மிகுந்த நேரங்களில் மிகுந்த நெருக்கடியை எதிர் நோக்கியதால் பாடசாலை அபிவிருத்திச்சங்கம் பிரதேசசபை, பிரதேசசெயலகம் ஊடாக முறைப்பாடு செய்ததால் தற்காலிக பாதசாரிக்கடவை வர்ணந்தீட்டப்பட்டு அமைக்கப்பட்டது.
ஆனாலும் பிரான்பற்று சந்தியிலிருந்து இது வளைவுகளற்ற நேர்வீதியாக உள்ளதால் வெளிப்பிரதேசம், வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களிற்கு பாதசாரி கடவை குறியீடோ அல்லது பாடசாலை அமைவிடமோ தெரியாத காரணத்தால் வேகமாக நேராக வாகனங்களை செலுத்துவதால் மாணவர்கள் பெற்றோர்கள் ஒருவகை அச்ச உணர்வுடனே வீதியை கடக்கவேண்டியவர்களாக உள்ளார்கள்.
நிரந்தர பாதசாரிகடவை
ஆகவே இவ்வீதி சொந்தமாகவுள்ள மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் (RDD) வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) ஆகியன விரைந்து தலையிட்டு இவ்வீதியில் பாடசாலைக்கருகில் வீதியின் இருபுறமும் பாடசாலை இருப்பதற்கான அடையாள குறியீட்டு பதாகை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்தோடு, தூரத்திலிருந்து வரும் போதே தெரியக்கூடியதான ஒளிரும் நிரந்தர பாதசாரி கடவை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |