நுழையவிடாது உங்களை மக்கள் அடித்து விரட்டுவார்கள்: ஆட்சியாளர்களுக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரிக்கை
மக்களுக்காக தான் எப்போதும் குரல் கொடுப்பதாகவும் பதவிகளை வழங்கி தனது வாயை மூடி விட முடியாது எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள முருத்தெட்டுவே ஆனந்த (Muruththettuwe Ananda) தேரர் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கொண்டு வந்துள்ள வரவு செலவுத்திட்டம், தோல்வியான புடலங்காய் திட்டம் எனவும் அதன் மூலம் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆனந்த தேரர், வரவு செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்படுவதன் முன்னர், சீனியில் இருந்து அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டிருந்தாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தற்போதைய ஆட்சியின் கீழ் மீண்டும் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் இருந்த வரிசை யுகத்தை நோக்கி நாட்டை கொண்டு சென்றுள்ளனர். இரண்டு வருடங்கள் முடிவடைவதற்குள் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படியே சென்றால், மக்கள் அரசாங்கத்தில் இருப்பவர்களை கிராமங்களுக்குள் நுழையவிடாது அடித்து விரட்டுவார்கள் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.