மலையகத்தில் அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள் (Photos)
மலையகத்திலும் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெருமளவு மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுகின்றமையை கண்டித்தும் அரசாங்கத்தைப் பதவி விலக கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தியவாறும் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
நுவரெலியா
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவிலும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் நுவரெலியா நகர வர்த்தகர்கள், ஊழியர்கள், விசேட பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள், ஊழியர்கள், பெருந்தோட்ட தொழிலாளர்கள், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை உதவியாளர்கள், தபால் ஊழியர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் உட்பட அரச திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ,பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக அரசாங்கத்தைவிட்டு விலக வேண்டும் எனவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டி வீதி, உடபுஸ்ஸாவ வீதி, நானுஓயா வீதி வழியாகப் பேரணியாகச் சென்ற மக்கள் நுவரெலியா பிரதான பாலகத்திற்கு முன்பாக ஒன்று சேர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொட்டகலை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இன்றைய பணிபுறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கொட்டகலை நகரில் இன்று மதியம் மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியை வழிமறித்த போராட்டக்காரர்கள் வீதிகளில் அமர்ந்து கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கொட்டகலை நகர வாசிகள், சூழவுள்ள பகுதிகளில் உள்ள மக்கள், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
மக்களை வதைக்கும் இந்த அரசு வீடு செல்ல வேண்டும், ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் ஒருமித்த குரலில் கோஷங்களை எழுப்பினர்.
பத்தனை
பத்தனை சந்தியில் இன்று அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தோட்ட தொழிலாளர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.
பத்தனை கிறேக்கிலி, மவுண்ட்வேர்ணன், இராணியப்பு, பொரஸ்கிறிக் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், பத்தனை முச்சக்கரவண்டி சாரதிகள், வாகன சாரதிகள், நகர வர்த்தகர்கள் என சுமார் 500ற்கும் மேற்பட்டோர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
மேற்படி தோட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் பேரணியாக பத்தனை சந்தி வரை வந்து அங்கு அனைவரும் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இன்றைய பணி புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்தும், தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், தொடர் மின் துண்டிப்பு, எரிபொருள் விலையேற்றம், டீசல் தட்டுப்பாட்டினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்செயலைக் கண்டித்துக் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. எதிர்ப்பு பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு, கறுப்புக் கொடிகளை ஏந்திக்கொண்டு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
திம்புள்ள
திம்புள்ள பகுதியில் இன்று மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.
தலவாக்கலை - நாவலப்பிட்டி பிரதான வீதியை வழிமறித்த போராட்டக்காரர்கள் வீதிகளில் அமர்ந்தும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வீதியை வழிமறித்ததன் காரணமாக நாவலப்பிட்டி, கெட்டபுலா, குயின்ஸ்பெரி, இராவணகொடை போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது.
கெட்டபுலா கொலபத்தனை, தலபத்தனை, கொங்காளை, குயின்ஸ்பெரி, கெலிவத்தை, போகவத்தை, திம்புள்ள போன்ற பகுதிகளில் உள்ள மக்கள், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
பொகவந்தலாவ
பொகவந்தலாவ நகரில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் பொகவந்தலாவ, டின்சின், கெம்பியன் ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள், நகர வர்த்தகர்கள், இளைஞர், யுவதிகள் என பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்ததோடு, வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுக் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டமானது பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பொகவந்தலாவ ஹோலிரோஸ்சரி மகா வித்தியாலயம் வரை பேரணியாகச் சென்றது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வங்கிகள், தனியார் பேருந்துகள், முச்சக்கரவண்டி சாரதிகள் என பலரும் ஆதரவு வழங்கியிருந்தனர்.





