வவுனியா போக்குவரத்து திணைக்களத்தில் தமிழ் அதிகாரிகள் இன்மையால் மக்கள் சிரமம்
வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள போக்குவரத்து திணைக்களத்தில் தமிழ் அதிகாரிகள் இல்லாமையால் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளரிடம் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சிங்கள அதிகாரிகள்
சாரதி அனுமதி பத்திரம் புதுப்பித்தல் உட்பட இன்னோரன்ன தேவைகளுக்காக போக்குவரத்து திணைக்களத்தில் உள்ள அதிகாரிகள் பொதுமக்களிடம் சிங்களத்தில் உரையாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தமிழ் மொழி மாத்திரம் தெரிந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு முகம்கொடுத்து வருவதுடன் தமது தேவையை நிறைவேற்ற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
பல மணி நேரமாக காத்திருக்கும் மக்கள்
கடும் வெயில் நேரங்களில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து படிவங்களை உரிய அதிகாரியிடம் வழங்கிய போதிலும் மேலதிகாரி கையொப்பமிட்டு வழங்குவதற்கு பல மணி நேரமாகுவதாகவும் பயன்பெற வந்தோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அரசியல்வாதிகளுக்கு அறிவித்த போதிலும் இதுவரை எவ்வித
நடவடிக்கையும் அவர்களும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.



