அனர்த்தங்களினால் சுமார் 2,200 விசேட தேவையுடையோர் பாதிப்பு
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களினால் சுமார் 2,200 விசேட தேவையுடையோர் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விசேட தேவையுடையோருக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்த நிலைமையினால் குறித்த தேவையுடையோர் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் உதவிச் சாதனங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக அந்தச் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் இவர்களின் இயல்பு வாழ்க்கை மேலும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது.
விசேட தேவையுடையோர்
பாதிக்கப்பட்ட தேவையுடையோர் குறித்த விபரங்களை மாவட்ட ரீதியாகச் சேகரிக்கும் பணிகளைத் தேசிய செயலகம் தற்போது ஆரம்பித்துள்ளது.

சேதமடைந்த உபகரணங்களின் பெறுமதி மற்றும் தேவையைக் கணிப்பிட்ட பின்னர், அவர்களுக்குத் தேவையான புதிய உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அல்லது உரிய இழப்பீடுகளை வழங்குவதற்கும் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தத்தமது பகுதி கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக விபரங்களை வழங்க முடியும் எனவும் செயலகம் குறிப்பிட்டுள்ளது.