ஊழல் அற்ற அரசியல்வாதியை தெரிவு செய்ய மக்கள் முன்வர வேண்டும்: விடுக்கப்பட்ட கோரிக்கை
ஊழல் அற்ற அரசியல்வாதியை தெரிவு செய்ய மார்ச் -12 இயக்கத்தின் 8 விடயங்களை பின்பற்றி செயற்பட மக்கள் முன்வர வேண்டும் என மார்ச்-12 அமைப்பின் அம்பாறை மாவட்ட குழு தெரிவித்துள்ளது.
மார்ச் -12 அமைப்பின் அம்பாறை மாவட்ட குழுவின் விசேட செய்தியாளர் சந்திப்பு கல்முனை சேனைக்குடியிருப்பு பகுதியிலுள்ள அலுவலகத்தில் நேற்று (12.03.2024) நடைபெற்றபோதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சித் திட்டம்
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“மார்ச்-12 அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கந்தையா சத்தியநாதன் 2015 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மார்ச் 12 அமைப்பின் செயற்பாட்டை மக்களுக்கு தெளிவூட்டுவதற்காகவே செய்தியாளர் மாநாட்டை நடாத்துகின்றோம்.
அதாவது உள்ளுராட்சி மாகாண சபை தேர்தல் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியான அரசியல்வாதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு நாம் இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளோம்.
மார்ச் 12 அமைப்பின் பாரிய நிகழ்ச்சி திட்டம் எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெற இருக்கின்றது. அதேவேளை மாவட்டங்கள் தோறும் இவ்வாறான செய்தியாளர் சந்திப்புக்களை ஏற்பாடு செய்து இதன் ஊடாக மக்களுக்கு பல்வேறு தெளிவூட்டல்களை மேற்கொள்ள இருக்கின்றோம்.
இணக்கப்பாட்டு ஒப்பந்தம்
இதில் 8 விடயங்களை கருத்தில் கொள்ளவுள்ளோம்.அதாவது ஒரு அரசியல்வாதியை தெரிவு செய்ய வேண்டும் என்றால் 8 விடயங்களை பின்பற்றி செயற்பட மக்கள் முன்வர வேண்டும்.
அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நாம் நடாத்தி அதன் ஊடாக பல்வேறு பெறுபேறுகளை பெற்றிருக்கின்றோம்.இதன் பிரகாரம் அவர்கள் எம்முடன் ஒரு இணக்கப்பாட்டு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருக்கின்றார்கள்.
அந்தவகையில், அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல்வாதியாக இருக்க வேண்டும். ஊழல் இலஞ்சம் அற்ற ஒருவராக இருக்க வேண்டும். நிதி நிலைமைகளை தெளிவாக அறிந்த ஒருவராக இருத்தல் வேண்டும்.
சமூகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவராக இருத்தல் வேண்டும். இது போன்று பல செயற்பாடுகளை நாங்கள் முன்வைத்துள்ளோம்.
அட்டைத் திட்டம்
இவ்வாறான விடயங்களை அரசியல் கட்சிகளும் ஏற்றிருக்கின்றார்கள். இங்கு மக்கள் அரசியல்வாதிகளுக்கு பல்வேறு அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.இதை தான் மக்களிடம் நாம் எதிர்பார்க்கின்ற விடயங்களாகும்.
இதற்கு அட்டை திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தி இருக்கின்றோம். இந்த அட்டையில் மக்கள் ஒவ்வொருவரும் அரசியல்வாதிகளை எவ்வாறு கணிப்பீடு செய்வது தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |