மன்னாரில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு (Photos)
நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஹர்த்தால் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மன்னாரில் மக்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள் இணைந்து இன்றுகாலை குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
காலை 9.30 மணியளவில் நெடுங்கண்டல் சந்தியில் ஆரம்பமான ஊர்வலம் மாந்தை மேற்கு பிரதேச செயலக வீதியைச் சென்றடைந்தது.
இதன்போது கண்டன ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அரசின் நடவடிக்கையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை, விலையேற்றம், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகியவற்றை முன் வைத்து அரசின் செயல்பாட்டைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.





