மூங்கிலாற்றில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மக்கள் பொலிஸாரிடம் கோரிக்கை(Photos)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மூங்கிலாறு தெற்கு கிராமத்தில் கடந்த 16ஆம் திகதியன்று சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கிராம மக்கள் கையொப்பம் இட்ட கோரிக்கையினை புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
கிராமத்தில் கசிப்பு உற்பத்தி, விற்பனை நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுவதால் பொதுமக்கள் அதிகளவான துன்பங்களையும் நெருக்கடிகளையும் நாளாந்தம் எதிர்கொண்டு வருகின்றார்கள்.
கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாரிய இடையூறாகக் காணப்படுகின்றது. கிராமத்தில் உள்ள பெண்களும் தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை உட்பட பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள்.
சட்டவிரோத கசிப்பு நடவடிக்கையினால் கிராமத்தில் பல்வேறு அசம்பாவிதங்களும் வன்முறைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதன் விளைவாக மக்கள் வீதிகளில் சுதந்திரமாக நடமாடமுடியாமல் உள்ளது குறிப்பாக கற்றல் நடவடிக்கைகளுக்காகப் பாடசாலைக்கும் மாலைநேர வகுப்பிற்கும் செல்லும் மாணவிகள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.
ஒட்டு மொத்தத்தில் கிராமத்தில் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள்.
குடித்துவிட்டு வீதிகளில் விழுந்து கிடத்தல், வீணாகப் பொதுமக்களிடம் சண்டை பிடித்தல், அயலில் உள்ளவர்கள் பாதிக்கும்படியாக கெட்டவார்த்தைகளைச் சத்தமாகப் பேசுதல், வீடுகளில் மனைவி பிள்ளைகளுடன் குடும்ப சண்டைகளில் ஈடுபடல், கத்தி, வாள், கோடாரி, கொட்டான் போன்ற ஆயுதங்களை வைத்து அயலில் உள்ளவர்களை அச்சுறுத்தி சண்டை பிடித்தல், கிராமத்தில் களவு, கொள்ளைச்சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படல், ஏனைய கிராமத்தினை சேர்ந்தவர்கள் கிராமத்திற்குள் வந்து வன்முறைகளில் ஈடுபடல், கஞ்சா உட்பட ஏனை போதைப்பொருட்களின் பாவனையும் விற்பனையும் காணப்படுதல் போன்ற சம்பவங்கள் கிராமத்தில் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்வாறா செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களால் இந்த கிராமத்தில் எதிர்கால சந்ததியினருக்கும் பிழையான முன்னுதாரணமாக இருப்பதுடன், கிராமத்திற்கும் நாட்டிற்கும் பயங்கரவாத சக்திகளை உருவாக்குபவர்களாகவும் விளங்குகின்றார்கள்.
ஆகவே மூங்கிலாறு வடக்கு கிராமத்தின் சட்டவிரோத போதைப்பொருள் கசிப்பு உற்பத்தியினை முற்றாக ஒழிப்பதற்கு பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களின் பெயர்கள் குறிப்பிட்டு அடையாளப்படுத்தி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மக்களின் கையெப்பத்துடனான கடிதம் ஒன்றினை கிராம அபிவிருத்தி சங்கத்தினர் கையளித்துள்ளார்கள்.
குறித்த கிராமத்தில் கடந்த 15 ஆம் திகதி காணாமல் போன 12 அகவை சிறுமி நேற்று
சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


