வவுனியா மக்களிடமிருந்து தமிழ் அரசியல்வாதிகளுக்கு கண்டன அறிக்கை
வவுனியா - பிரமனாலங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பொதுமக்கள், சமீபகாலமாக தமிழ் அரசியல்வாதிகள் பொதுத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு வரும் இன பிரதேச மற்றும் மொழி அடிப்படையிலான இழிவுபடுத்தும் கருத்துகள் குறித்து வன்மையான கண்டனத்தை தெரிவித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டமானது நேற்று(27.03.2026) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், அரசியல் லாபங்களுக்காகவும் அதிகாரப் போட்டிகளுக்காகவும் வெறுப்புப் பேச்சுகளை பயன்படுத்துவது சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய கோரிக்கைகள்
இந்த நிலைமையை முன்னிட்டு, பிரமனாலங்குளம் மக்களால் அவசர வேண்டுகோளாக பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி,
- அரசியல்வாதிகள் இன மொழி மற்றும் பிரதேச அடிப்படையிலான வெறுப்புப் பேச்சுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அரசியல் நாகரிகத்தை பேணி, மக்களின் பிரச்சினைகளை ஆக்கபூர்வமாக அணுக வேண்டும்.
- அரசியல் கட்சிகள் தார்மீக ஒழுக்கக் கோவையை உருவாக்கி, மீறுபவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இனவாதம் மற்றும் பிரதேசவாதத்தை கட்டுப்படுத்த வலுவான சட்ட நடைமுறைகள் நாடாளுமன்றத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
- பொறுப்பற்ற பேச்சுகளால் உருவாகும் அச்ச உணர்விலிருந்து பொதுமக்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இந்நிலையில், சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர புரிதலை வளர்க்கும் அரசியல் பண்பாட்டை தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும், நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும் எந்த நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

