வீதியில்லாமல் அவதிக்குள்ளாகும் வவுனியா வடக்கு பிரதேச மக்கள் - ரவிகரன் எம்.பி கொடுத்த வாக்குறுதி
வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாமடு கிராம அலுவலர் பிரிவிலுள்ள சாண்டான்குளம் வீதியைச் சீரமைப்பதுடன், வினாசிகுளம் பாலத்தையும் நிர்மாணிக்குமாறு அப்பகுதி மக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பகுதி மக்களின் முறைப்பாட்டிற்கமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்தார்.
இதன்போதே மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீதியில்லாமல் அவதிக்குள்ளாகும் மக்கள்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாண்டான்குளம் வீதி சீரின்றிக் காணப்படுவதாலும், அந்த வீதியோடு இணைந்துள்ள வினாசிகுளம் பாலம் இதுவரை நிர்மாணிக்கப்படாமல் காணப்படுவதால் வினாசிகுளம் கிராம மக்கள் பாரிய போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

அந்தவகையில், குறித்த சாண்டான்குளம் வீதியும், அதனோடிணைந்த வினாசிகுளம் பாலமும் சீரின்றிக்காணப்படுவதால் வினாசிகுளம் கிராமத்தில் வசிக்கின்ற 300இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வைத்தியசாலை, பாடசாலை உள்ளிட்ட அடிப்படைத் தேவைளை பெறுவதற்கு பாரிய போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொள்வதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையிடப்பட்டது.
அத்துடன், மழைக்காலங்களில் சாண்டான்குளம் வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்படும் நிலையும் காணப்படுவதாகவும், சேனைப்புலவு கிராமத்தினூடாக 4 கிலோமீற்றர் தூரம் சுற்றி, பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிவருவதாகவும் வினாசிகுளம் கிராமமக்கள் ரவிகரன் எம்.பியிடம் தெரிவித்துள்ளனர்.
குறித்த வினாசிகுளம் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பெரியகுளம், மாமடு, பழம்பாசி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் பலத்த போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக விவசாயத்திற்குரிய உள்ளீடுகளைக் கொண்டுவருவதிலும், அறுவடைகளை எடுத்துச் செல்வதிலும் பாரிய போக்குவரத்து நெருக்கடிகள் காணப்படுவதாக எம்.பியிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
கோவிட் - 19 தொற்று காலப்பகுதி இடைநிறுத்தம்
இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் கிராமமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவந்த நிலையில், கடந்தகாலத்தில் அப்பாலத்தினை நிர்மானிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும், நாட்டில் ஏற்பட்ட கோவிட் - 19 பெருந்தொற்றினைக் காரணங்காட்டி குறித்த பாலத்தின் நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் அப்பகுதி மக்களால் கூறப்பட்டுள்ளது.

எனவே சாண்டான்குளம் வீதியைச் சீரமைப்புச்செய்வதுடன், வினாசிகுளம் பாலத்தினையும் நிர்மாணிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், மக்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த வீதியைச் சீரமைப்பது தொடர்பிலும், வினாசிகுளம் பாலத்தினை நிர்மானிப்பது தொடர்பிலும் தம்மால் கவனம் செலுத்தப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கள விஜயத்தின் போது, வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான செ.சுசீலன், த.தனுசன், இலங்கைத் தமிழசுக்கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளைச் செயலாளர் அமலன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.