வீட்டில் இருந்து உணவுப் பொட்டலங்களை கொண்டு வருவதாக கூறிய அநுர தரப்பு! 24 கோடி ரூபாவுக்கு கணக்கு கேட்கும் அரசியல்வாதி
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கடந்த காலங்களில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டிலிருந்தே உணவுப் பொட்டலங்களைக் கொண்டு வந்து உட்கொள்வோம் என கூறினார்கள். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது என்று ஐ.ம.சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதிகரித்துள்ள உணவு செலவினம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவுகளுக்கான செலவினங்கள் 48 சதவீதத்தினால் அதிகரித்துள்ள போதிலும், அரசாங்கம் இதுவரை எவ்வித பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வருகின்றது.
நாடாளுமன்றத்தின் உணவு மற்றும் பானங்களுக்கான செலவுகள் குறித்து பல செய்திகள் கடந்த நாட்களில் ஊடகங்களில் அதிகமாக வெளியிடப்பட்டிருந்தன.

2025ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தின் உணவு மற்றம் பானங்களுக்கான செலவினங்கள் 48 சதவீதத்தால் அதிகரித்து 24.7 கோடி ரூபாயைக் கடந்துள்ளது.
தினசரி உணவு உட்கொள்பவர்களின் எண்ணிக்கையும், குடிநீர் போத்தல்களுக்கான செலவினமும் கடுமையாக அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த உறுப்பினர்கள், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாடாளுமன்ற உணவகத்தை மூடிவிட்டு வீட்டில் இருந்து உணவுப் பொட்டலங்களை கொண்டு வருவோம் என தெரிவித்தனர்.
இதன்மூலம் மக்களின் பணத்தை சேமிக்கப் போவதாகவும் கூறினர். ஆனால், இன்று அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது 24.7 கோடி ரூபாவை நாடாளுமன்ற உ ணவுக்காகச் செலவிட்டிருப்பது விமர்சனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.