முன்னாள் பெண் அதிபர் கொடூரமாக கொலை - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தில் 69 வயதான ஓய்வுபெற்ற பெண் அதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
நபர் ஒருவர் தனது பிள்ளையின் பிறந்தநாளுக்கு கேக் வாங்குவதற்காகப் பணம் திரட்ட முயன்ற போது, வீட்டில் தனியாக இருந்த ஆசிரியர் ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இருவர் 22 ஆம் திகதியன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொடூரமாக கொலை
வீடு வீடாக சென்று தேங்காய் பறிக்கும் நபர் ஒருவரும், 2 முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுமே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறக்குவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹிட்டிய, பெலவத்தை பகுதியை சேர்ந்த விமலானி என்ற ஓய்வுபெற்ற பெண் அதிபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி மாலை, தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் உயிரிழந்த பெண்ணின் ஒரே மகன், இரவு 7.45 மணியளவில் வீடு வந்து தனது தாயை தேடியுள்ளார்.
இதன்போது தாயின் நிர்வாணமான சடலம் வீட்டின் அறை ஒன்றின் தரையில் கிடப்பதைக் கண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இது குறித்து அயலவர்களுக்கு தெரிவித்து, தாயின் மர்ம மரணம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
சம்பவம் நடந்த நாளின் பகல் வேளையில் கூலிக்குத் தேங்காய் பறிக்கும் நபர் ஒருவர் நடமாடியுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்று மாலை வேளையில் ஆசிரியை கொல்லப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள வீதியில் பிரதான சந்தேக நபர் நடமாடியுள்ளதாகவும் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அடுத்த நாள் அதிகாலை மூன்று மணியளவில் சந்தேக நபரை கைது செய்து விசாரித்த போது, கொலை செய்யப்பட்ட ஆசிரியைக்கு சொந்தமான தங்க மோதிரம் ஒன்று சந்தேக நபரின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தங்க மோதிரம்
பெண் அதிபரின் வீட்டின் காணிக்குள் சென்று மறைந்திருந்து வீட்டின் பின்பக்க கதவூடாக வீட்டிற்குள் நுழைந்து, குளிக்கத் தயாராக இருந்த அவரது தலையில் கட்டையால் பலமுறை தாக்கியதாக சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அவர் கீழே விழுந்ததும், அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியையும் தங்க மோதிரத்தையும் கழற்றிக் கொண்டு தப்பியோடியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செயலுக்காகத் தனது உதவிக்கு முச்சக்கர வண்டி ஓட்டுநரான தனது நண்பரையும் ஈடுபடுத்திக் கொண்டதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
தனது பிள்ளையின் பிறந்தநாளுக்கு கேக் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வாங்குவதற்குப் பணம் தேடுவதற்காகவே இதனைச் செய்ததாகச் சந்தேக நபர் மேலும் தெரிவித்துள்ளார்.
திருடப்பட்ட தங்கச் சங்கிலியை கொடகெவல நகரில் உள்ள தனியார் அடகு மையமொன்றில் 90,000 ரூபாவிற்கு அடகு வைத்து பணம் பெற்றுக் கொண்டதாகவும், அன்றைய இரவில் நண்பர்களுடன் சேர்ந்து விருந்து வைத்து கொண்டாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபருடன் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் இருவரிடமும் சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.