ஈரான் உட்பட அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது – டிரம்ப்
ஈரான் உட்பட தனக்கு எதிரான அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் அமெரிக்கா தீர்க்கமான வெற்றியைப் பெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தள பக்கமான 'ட்ரூத் சோஷியல்' இல் இது குறித்துப் அவர் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச அரங்கிலான அமெரிக்காவின் இந்த வெற்றிகரமான நிலையை மறைக்கவும், குடியரசுக் கட்சியினரின் உத்வேகத்தைச் சீர்குலைக்கவும் எதிர்க்கட்சியான டெமோக்ராட்டுகள் போலி கருத்துக்கணிப்புகளைப் பயன்படுத்தி வருவதாகச் சாடியுள்ளார்.

தீவிர இடதுசாரி டெமோக்ராட்டுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் போலி கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுப் பித்தலாட்டம் செய்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
குடியரசுக் கட்சியினர் வாக்களிப்பதைத் தடுப்பதற்காக, அவர்களின் மனஉறுதியைக் குலைக்கும் நோக்கிலேயே இத்தகைய 'மனஉறுதி சீர்குலைப்பு நடவடிக்கைகள்' முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கள நிலவரப்படி உண்மையான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் அமெரிக்காவிற்கு மிகவும் சாதகமாகவும் அபாரமாகவும் அமைந்துள்ளன. நமது நாட்டின் எழுச்சியும் உத்வேகமும் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியாக மீள முடியாத வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஈரான் உட்பட, நமக்கு எதிரான அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் அமெரிக்கா முழுமையான வெற்றியைப் பெற்று வெற்றிப் பாதையில் பயணித்து வருகிறது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.