கடற்றொழில் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாகச் செலவிடப்படவில்லை: நாமல் குற்றச்சாட்டு
கிராம அபிவிருத்தி மற்றும் கடற்றொழில் துறைகளுக்காக அரசாங்கத்தினால் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், அந்த நிதி உரிய முறையில் செலவிடப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு கிராம அபிவிருத்திக்காக 35 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், அதில் சுமார் ஒரு பில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (27.11.2026) நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
நிதி ஒதுக்கீடுகள்
நிதி ஒதுக்கீடுகள் அதிகமாக இருப்பதை விட, அவை மக்களின் வாழ்வாதாரத்தையும் நாட்டின் அபிவிருத்தியையும் மேம்படுத்தும் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதே முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தினார்.
சில அமைச்சுக்களின் மூலதனச் செலவினங்கள் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக நிதிக்குழுவின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

2020 முதல் 2022 வரையான பொருளாதார நெருக்கடி நிறைந்த காலப்பகுதியிலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் அதிகளவிலான மூலதனச் செலவினங்கள் பேணப்பட்டதாகவும் அவர் நினைவுபடுத்தினார்.
மீன்பிடித் துறையின் நிலைமை குறித்தும் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடற்றொழில் அமைச்சின் மூலதனச் செலவினம் சுமார் 20 வீதத்தால் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
கோரிக்கை
இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் கடற்றொழில் துறைக்காக 9 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், அதில் சுமார் 1.9 பில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு கடற்எதிர்கொள்ளும் இந்திய இழுவைப் படகுப் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காணும் வகையில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பதற்காகவே அரச ஊழியர்கள் சம்பள உயர்வைக் கோருவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

கிராமப்புறப் பொருளாதாரத்தையும், கடற்றொழில் துறையையும் மீட்டெடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை உரிய முறையில் பயன்படுத்துவதற்கான அவசர வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார்.
குறிப்பாக, அடுத்த ஆண்டில் மீன்பிடி அமைச்சின் மூலதன ஒதுக்கீட்டிலிருந்து குறைந்தபட்சம் 3 முதல் 4 பில்லியன் ரூபாய் வரையிலான நிதியையாவது செலவிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
Bigg Boss 10: கண்ணீருடன் உள்ளே வந்த முனியம்மாவிற்கு கொடுத்த முத்தம்! வெட்கத்தில் லக்ஷ்மி பிரியா Manithan