20 வருடமாக காணி ஆவணம் வழங்கவில்லை: வவுனியாவில் மக்கள் குற்றச்சாட்டு
வவுனியாவில் 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 20 வருடமாக தமக்கு காணி ஆவணம் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
வவுனியா, ஊர்மிளா கோட்டம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் இன்று (19.01.2024) ஒன்று கூடிய 13 கிராம மக்களும் தமது ஆதங்கத்தை பதாதைகளாக காட்சிப்படுத்தியதுடன், பொங்கல் நிகழ்விலும் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போதே தமது ஆதங்கங்களை மக்கள் இவ்வாறு பதிவு செய்துள்ளனர்.
மக்களின் குற்றச்சாட்டுகள்
மக்கள் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ”யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு 1994 ஆம் ஆண்டு அப்போது இருந்த அரச சார்ப்பு இயக்கங்களினால் மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு 11 கிராமங்களில் 385 குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர்.
குறித்த பகுதியில் மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டு 30 வருடங்கள் கடந்த நிலையிலும் மக்களுக்கான காணி ஆவணங்கள் வழங்கப்படாமையால் வீட்டுத் திட்டம், மலசலகூடம் என்பன முறையாக வழங்கப்படவில்லை.
வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளும் குறித்த கிராமங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் இங்கு வாழும் மக்கள் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருவதுடன், கிராமங்களும் அபிவிருத்தி அடையாத நிலையில் உள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அந்தவகையில், காத்தான் கோட்டம், ஊர்மிளா கோட்டம், இராமையன்கல், பிரமானலங்குளம், நெளுக்குளம், அம்பிகைபாலன் கோட்டம், தட்சன்குளம், அருவித்தோட்டம், ஈசன்குடியிருப்பு, புதியவேலர் சின்னக்குளம், தாஸ் கோட்டம், சேகர் கோட்டம், குகன் நகர் ஆகிய கிராமங்கரைளச் சேர்ந்த மக்களே இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன்போது, குறித்த பகுதிக்கு மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் பிரத்தியேக செயலாளர் டினேஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னித் தொகுதி அமைப்பாளரின் பிரத்தியேக செயலாளர் யசோதரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











