மக்கள் ஒருபோதும் வீதிக்கு வந்து தேர்தலை நடத்தக் கோரவில்லை: இராஜாங்க அமைச்சர் பதிலடி
இலங்கையின் இன்றைய நிலைமையில் மக்கள் ஒருபோதும் வீதிக்கு வந்து தேர்தல் கேட்கவில்லை. பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்குமாறே அவர்கள் கூறுகின்றனர் என இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
'துணிவு இருந்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடத்திக் காட்டுங்கள்' என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும அரசாங்கத்துக்கு பகிரங்க சவால் விடுத்திருந்தார் .
இதற்குப் பதில் வழங்கும் போதே இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்
மேலும் தெரிவிக்கையில், "வாக்குரிமையை நிலைநாட்டியவர் மகிந்த ராஜபக்சதான்.
போரை நிறைவு செய்தபின் வடக்கு, கிழக்கில் நடத்தப்படாமல் இருந்த மாகாண சபைத் தேர்தலை நடத்தினார்.
கள்ள வாக்குகள் போடப்பட்ட ஒரு காலம் இருந்தது. தேசிய அடையாள அட்டையைக் கட்டாயப்படுத்தி கள்ள வாக்குகள் போடுவதை மகிந்த ராஜபக்ச நிறுத்தினார்.
அதனால் தேர்தல் தேவையில்லை என்று சொல்லுவதற்கு நாம் தயாரில்லை. ஆனால், இன்று இருக்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறைமை திரிவுபடுத்தப்பட்ட ஒன்று.
இது பற்றி எவரும் நாடாளுமன்றில் பேசுவதில்லை. ஜே.வி.பி. எல்லாவற்றையும் விமர்சிக்கின்றது. ஒருபோதும் இந்தத் தேர்தல் முறைமை பற்றி ஜே.வி.பி. கூறியது இல்லை.
நாட்டின் பொருளாதார நிலை
அவர்களுக்குத் தேவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டும்தான். முடிந்தால் ஜே.வி.பி. ஒரு சபையையாவது கைப்பற்றிக் காட்டட்டும். மக்கள் ஒருபோதும் வீதிக்கு வந்து தேர்தல் கேட்கவில்லை.
பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்குமாறே அவர்கள் கூறுகின்றனர். கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நாட்டை முன்னேற்றுவோம் என்று நாம் மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய போதிலும் நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக அது முடியாமல் போனது. இதற்கு எதிராக எழுந்த போராட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் தடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
