கொந்தளிக்கும் மக்கள்! அரசாங்கத்தின் கண்டுபிடிப்புகள் (VIDEO)
இலங்கையின் கோட்டாபய அரசாங்கம் சொல்லிலும் செயலிலும் நிதானமான ஜனநாயகத்தை கடைப்பிடித்தால் மாத்திரமே தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ள கிளர்ச்சியை கட்டுப்படுத்தமுடியும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட மீரிஹன வீட்டுக்கு செல்லும் வழியில் நேற்று மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பின்னர் ஒரு கட்டத்தில் அது அடிப்படைவாதிகளால் கலவரமாக மாற்றப்பட்டதாகவும்;, அந்த அடிப்படைவாதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்த போராட்டம் அரசியல் கட்சிகளின் அனுசரணையில் இடம்பெறவில்லை என்பதை ஜனாதிபதியின் தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆகவே 1970ஆம் ஆண்டு காலத்துக்கு பின்னர் பட்டினி நிலையை எதிர்கொள்ளும் மக்களின் சுய சிந்தனைப்; போராட்டமாக கருதுவதே சிறந்தது.
எனவே இதனை அரசாங்கம் கவனமாக கையாளவேண்டிய வேண்டிய அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.
இலங்கையில் 1953ஆம் ஆண்டு லங்கா சமசமாஜக்கட்சியின் தலைமையிலான இடதுசாரிக்கட்சிகள் நடத்திய ஹர்த்தால் என்ற சொல்லப்படும் நிர்வாக முடக்கல் போராட்டமே, இதுவரை காலத்தில் ஆட்சியை மாற்றிய மக்கள்மயப்; போராட்டமாக கருதப்படுகிறது.
அதற்கு பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்கள் யாவும் பெரும்பாலும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டவைகளாகவே அமைந்திருந்தன.
அதேநேரம் 1977ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை செயலுக்கு வந்த பின்னர் போராட்டங்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு வகையில் அரச இயந்திரத்தினால் செயலிழக்கச் செய்யப்பட்ட வரலாறுகளே உள்ளன.
இந்தநிலையில் தற்போதைய நிலை முற்றிலும் மாறுப்பட்டது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்ட கோட்டாபய, 20வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் அதீத அதிகாரங்களையும் தமது கைகளுக்கு மாற்றிக்கொண்டார்.
இது நாட்டை கட்டியெழுப்புவதற்கான, மாற்றத்துக்கான முயற்சி என்று அவர் கூறிவந்தார்.
ஆனால் இன்று அந்த மாற்றம் மாறியுள்ளது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள் செய்த காரியங்களே இன்றும் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
அரசியல் பழிவாங்கல், வழக்குகளில் இருந்து அரசாங்கத்துக்கு சார்பானவர்கள் விடுவிக்கப்படுகின்றமை, நிர்வாகத்தில் அரசாங்கத்தின் செல்வாக்கு என்பன அதீதமாக உள்ளது என்று எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
இதனை அரசாங்கமும் கண்டு கொள்ளாமல் செயற்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் நேற்று இடம்பெற்ற போராட்டத்துக்கு அடிப்படைவாதிகளே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது அரசாங்கம், தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை திசை திருப்பும் முயற்சியாகவே கருதவேண்டும். உண்மையில் இந்த போராட்டத்துக்கு அடிப்படை பின்னணிக் காரணம் என்ன? என்று பார்த்தால் அரசாங்கத்தின் நிர்வாக சீரின்மை என்பதையே பலரும் சுட்டிக்;காட்டுகின்;றனர்.
எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் பொறுமையும் நிதானமும், ஆக்கப்பூர்வ செயற்பாடுகளுக்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டும்.
இதற்கு பொருத்தமாக உக்ரைன் போர்க்களச் செய்திகளின் வெளியீடுகளை சுட்டிக்காட்டமுடியும். போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில் அமைதியை ஏற்படுத்த முயலும் ரஸ்ய மற்றும் உக்ரைன் அரசாங்க தரப்புக்கள், கருத்துக்களை வெளியிடுவதில் தாம் கவனத்தை கடைப்பிடிப்பதாக அடிக்கடி கூறிவருவதை இலங்கை அரசாங்கத்தரப்பு கவனத்தில் கொள்ளவேண்டும்.
சொல்களும், செயல்களும்,அறிக்கைகளும் பிரச்சினையை தீர்க்கமாட்டாது. மாறாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டியதே தற்போது அரசாங்கத்துக்கு முன்னுள்ள சவாலாகும்.
எனவே அதற்கான வழியை அரசாங்கம் தேடவேண்டும். போராட்டங்களை நசுக்குவதைக் காட்டிலும் போராட்டங்களை முன்கூட்டியே தடுப்பதே புத்திசாலித்தனமாக இருக்கும்.
அத்துடன் அரசாங்கத்தின் சார்பில் ஒருவர் மாத்திரமே பேசவல்ல பேச்சாளராக இருப்பது தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமானதாக இருக்கும்.
ஏனெனில் ஜனநாயகம் என்ற போர்வையில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலரும் பல கருத்துக்களை வெளியிடுவது இறுதியில் அரசாங்கத்தின் தலைமைக்கே பிரச்சினையாக வந்துசேரும் என்பதை அரசாங்கத்தரப்பு உணரவேண்டும்.
ஆகவே மக்கள் கொந்தளிப்புக்களை ஆரம்பத்திலேயே ஆக்கப்பூர்வமான செயல் வடிவத்தில் அரசாங்கம் அனுகினால் அது அரசாங்கத்தின் இருப்புக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கும்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
