அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள்: போராட்ட களமாக மாறிய மலையகம் (Photos)
மலையகத்தின் பல பகுதிகளிலும் அரசுக்கு எதிரான பாரிய போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் ஹட்டன், நுவரெலியா போன்ற பல பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்று நடைபெற்று வரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு வலுசேர்க்கும் முகமாக நுவரெலியாவிலும் பாரிய போராட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா நகரத்தில் வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலைய கடைகள் மூடப்பட்டு மரக்கறிகள் கொள்வனவு செய்யப்படவில்லை.
இதேவேளை இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் மதகுருமார்கள், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை உதவியாளர்கள், தபால் ஊழியர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், விவசாயிகள் உட்பட அரச திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக அரசாங்கத்தைவிட்டு விலக வேண்டும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நுவரெலியா நகரத்தில் பேரணியாகச் சென்ற இவர்கள் நுவரெலியா பிரதான தபாலகத்திற்கு முன்பாக ஒன்று சேர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நுவரெலியா - இராகலை நகரில் இன்று அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இராகலை நகரைச் சுற்றியுள்ள 10 தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், வலப்பனை
கல்வி வலய அதிபர், ஆசிரியர்கள், இளைஞர்கள், யுவதிகள் இராகலை முச்சக்கரவண்டி
சாரதிகள், நகர வர்த்தகர்கள் என சுமார் 1000ற்கும் மேற்பட்ட மக்கள் ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தினை
முன்னெடுத்தனர்.
நோர்வூட்
நோர்வூட் எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக இன்று அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தோட்டத் தொழிலாளர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.
நோர்வூட் கீழ்பிரிவு, வெஞ்சர் கீழ்பிரிவு ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், முச்சக்கரவண்டி சாரதிகள், வாகன சாரதிகள், நகர வர்த்தகர்கள் என சுமார் 500ற்கும் மேற்பட்டோர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
மேற்படி தோட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் பேரணியாக நோர்வூட் சந்தி வரை வந்து அங்கு அனைவரும் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்தனர். இன்றைய பணிபுறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்தும், தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், தொடர் மின் துண்டிப்பு, எரிபொருள் விலையேற்றம், டீசல் தட்டுப்பாட்டினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்செயலைக் கண்டித்துக் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. எதிர்ப்பு பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு, கறுப்புக் கொடிகளை ஏந்திக்கொண்டு கோஷங்களை எழுப்பியவாறு, வீதியில் டயர்களை எரித்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ஹட்டன்
ஹட்டன் நகரில் அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் தனியார் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 1000ற்கும் மேற்பட்டோர் இன்று இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
மேற்படி போராட்டக்காரர்கள் பேரணியாக ஹட்டன் நகரத்திலிருந்து மல்லியப்பு சந்தி வரை சென்று அங்கு அனைவரும் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
அதன் பின் மீண்டும் ஹட்டன் நகரத்திற்குள் பேரணியாகச் சென்றனர். இன்றைய பணிபுறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்தும், தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், தொடர் மின் துண்டிப்பு, எரிபொருள் விலையேற்றம், டீசல் தட்டுப்பாட்டினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்செயலைக் கண்டித்துக் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. எதிர்ப்பு பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு, கறுப்புக் கொடிகளை ஏந்திக்கொண்டு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.





