பொருளாதார ஆதாயமிக்க உடுப்புக்குளம் முறிப்பு பழைய வீதியைத் திருத்தக் கோரும் மக்கள்
முல்லைத்தீவில் உள்ள உடுப்புக்குளம் மற்றும் முறிப்பு கிராமங்களை இணைக்கும் பழைய வீதியை திருத்தியமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுப்புக்குளம் வயல்வெளிக்கும் அதனைத் தொடர்ந்து விராலி வயல் நிலங்களுக்குமான பாதையாகவும் முறிப்பு கிராமத்திற்கொன இருந்த பழைய பாதையாகவும் இது இருக்கின்றது. மூன்று கிலோமீற்றர் தூரமுள்ள இந்த பாதையின் புனரமைப்பு பொருளாதார ஆதாயமிக்கதாக இருக்கின்றது என சமூகவிட ஆய்வாளர் குறிப்பிடுகின்றார்.
ஐம்பது வருடங்களுக்கு மேலாக சரிவர சீரமைக்கப்படாத பாதையாக இது இருப்பதை மக்களுடனான உரையாடல்களின் மூலம் அறிய முடிந்தது.
ஆரம்ப காலங்களில் இருந்த இடங்களை விட்டு புதிய இடங்களில் குடியேறும் போக்கின் ஒரு வாய்ப்பாகவே இந்த பாதையின் திருத்தமும் பாராமுகமாக இருப்பதை உணர முடிகின்றது.
பாதையின் தேவை
முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியுடன் தண்ணீரூற்று குமுழமுனை வீதியை இணைக்கும் வீதிகளில் உடுப்புக்குளம் முறிப்பு பழைய வீதியும் புதிய வீதியும் முதன்மை பெறுகின்றன.
முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் இருந்து முறிப்பு கிராமத்திற்கு செல்வதற்கான குறுகிய தூரம் கொண்ட பாதைகளாக இவை இரண்டும் இருக்கின்றன.
புதிய வீதியும் கூட திருத்தியமைக்கப்படாது பாதையின் முழு நீளத்தில் அரைவாசிக்கும் குறைவான பகுதியே சாதாரணமாக பயணிக்கக்கூடிய படி இருக்கின்றது.
பழைய வீதியின் முழுமைக்கும் கால்ப் பங்குதான் இயல்பான பாதையின் வடிவத்தைப் பெற்றுள்ளது. பாதையின் ஏனைய பகுதிகள் எல்லாம் மணலால் நிறைந்து கடற்கரை மணல் போல் இருப்பதாக அந்தப் அந்தப் பாதையை பயன்படுத்தி வரும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
பழைய பாதையின் வழியே உள்ள பாலம் சேதமடைந்து நீர்தேங்கி இருப்பதோடு பாலத்துடன் கூடிய இருபது மீற்றர் வரையான பாதை நீர்க்கசிவோடு இருப்பதையும் அவதானிக்க முடியும்.
பாதையை விட்டு விலகி வெள்ள நீரோடும் ஊற்றாறின் ஊடாக மக்கள் பயணப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
பாதையின் புனரமைப்பு தென்னம் தோப்பு மற்றும் வயல் நிலங்கள் , முந்திரிகை தோட்டங்கள் என்பவற்றை பராமரிப்பதற்கும் அவற்றின் விளைவுகளை சந்தைப்படுத்துவதற்குமான பயணங்களை இலகுவாக்கித் தரும் என அம் மக்கள் மேலும் குறிப்பிட்டனர்.
ஊற்றாறின் பாய்ச்சல்
கொத்திகாமம் குமுழமுனையின் கிழக்குப் பக்கமாக உள்ள இடங்களில் இருந்து ஊறி வரும் நீரினால் சிறிய ஊற்றாறு ஆண்டு முழுவதும் பாய்ந்தபடி இருக்கிறது. இது உடுப்புக்குளம் முறிப்பு பழைய பாதையையும் புதிய பாதையையும் குறுக்கறுத்துப் பாய்கின்றது.
இந்த நீரின் தொடர்ச்சி பாலக்காட்டுவான் குளத்திற்குச் செல்கின்றது. மாரி காலங்களில் அதிகளவு நீரோட்டம் உயர் அழுத்தத்துடன் பாய்வதாக அவ்வூர் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
புதிய வீதியில் ஊற்றாறை கடப்பதற்கு பொருத்தமான பாலம் உள்ள போதும் பழைய வீதியை கடந்து செல்ல பொருத்தமான பாலம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாலங்கள் தேவை
கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக உடுப்புக்குளம் முறிப்பு பழைய பாதையில் உள்ள பாலங்கள் உரிய முறையில் அமைக்கப்படவில்லை.
முன்னர் சிறிய மதகுகளாக இருந்தன.மாரி மழையினால் கிடைக்கும் நீரோட்டத்தின் விளைவால் அவை ஒவ்வொரு ஆண்டும் இழுத்துச் செல்லப்பட்டு விடும்.
கிராம மக்கள் சிரமதானச் செயற்பாடுகளின் மூலம் காலத்துக்கு காலம் திருத்தியமைத்து வந்திருந்தனர்.
பின்னர் சிலிப்பர் மரக்குற்றிகளை அடுக்கி மரப்பாலத்தினை அமைத்துப் பயன்படுத்தியிருந்தனர்.மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் வெள்ளம் இந்த பாதையினை குறுக்கறுத்துப் பாய்வதால் பாலம் அடிக்கடி சேதமடைந்தவாறு இருந்தது என 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான நினைவுகளை அபிவிருத்திச் சங்கத்தினைச் சேர்ந்த சமூக சேவையாளர் குறிப்பிட்டிருந்தார்.
இப்போது சீமெந்துப் பாலங்கள் அமைக்கப்பட்ட போதும் அவை நீரோட்டங்கள்; பாதையை குறுக்கறுக்கும் பொருந்தமான இடங்களில் அமையவில்லை என பொறியியல் துறைசார் கற்கையில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
பாதையின் வழியே உடுப்புக்குளம் முறிப்பு கிராமங்களின் எல்லையாக அமையும் இடத்தில் வெள்ள நீரால் குறுக்கறுக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இப்போது பாதையை பயன்படுத்தும் மக்கள் பலரும் பாதையினை குறுக்கறுத்துள்ள நீரினூடாகவே பயணிக்கின்றனர். அதற்கு அப்பால் ஒரு கிலோமீற்ரரளவிற்கு மணல் நிரம்பியுள்ள இடத்தினூடாக பயணிக்கின்றனர்.
அக்கறை தேவை
புதிய புனரமைப்புச் செயற்பாடுகளுக்கான திட்டமிடல்களின் போது உடுப்புக்குளம் முறிப்பு பழைய பாதையின் புனரமைப்புத் தொடர்பிலும் அக்கறை எடுக்கப்பட வேண்டும் என்பது அவ்வூர் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
ஊரின் பழைமையான பாதையை புனரமைத்துப் பேண வேண்டும் என்ற பேரவாவினை அவ்வூரில் பிறந்து வளர்ந்த பலரும் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இது தொடர்பில் உரிய துறைசார் அதிகாரிகள் பார்வையிட்டு நிலைமைகளை நன்கு அவதானித்து பொருத்தமான முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருளாதார நன்மைகளை தரக்கூடிய இந்த உடுப்புக்குளம் முறிப்பு பழைய வீதியின் புனரமைப்புப் பற்றிய அக்கறையின்மை தொடர்பில் சமூக விடய ஆய்வாளர் வரதன் குறிப்பிடும் போது " அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு முதலீடுகளாக இருந்தாலும் அவை பொருளாதார நன்மையினைக் கருத்தில் எடுத்து மேற்கொள்ளப்படும் போது அதிகளவான பொருத்தப்பாட்டை விளைவாக தந்து நிற்கும்.
உடுப்புக்குளம் முறிப்பு பழைய பாதையின் நின்று நிலைக்கும் வகையிலான புனரமைப்புச் செயற்பாடு விவசாயிகளுக்கு மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு அதிக நன்மையினைத் தரக்கூடியதாக இருக்கும்.
அப்படியிருந்தும் பிரதேச செயலகம்,மாவட்டச் செயலகங்களின் செயற்பாடுகள் இவை பற்றிய சிந்தனைப்பாட்டின் விளைவுகளை சீர்தூக்கி ஆராய்வதில் தோற்றுப் போய்விடுகின்றன போலும் என குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.