அக்கரைப்பற்று சதொச விற்பனை நிலையத்தில் சீனி இல்லை: ஏமாற்றமடைந்த மக்கள் (Photo)
அக்கரைப்பற்று அரச சதொச விற்பனை நிலையத்தில் இன்று சீனி மூட்டைகள் இறக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களில் சீனி முடிவடைந்து விட்டதாக தெரிவித்தமை பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை முதல் சீனி மூட்டைகள் இறக்கப்படுவதாக மக்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு கூடிய மக்கள் நீண்ட வரிசையில் சீனியை பெற காத்திருந்தனர்.
சதொச நிலையத்தின் நியாயமற்ற செயற்பாடு
இந்நிலையில் நண்பகல் அளவில் லொறி மூலம் சீனி மூட்டைகள் இறக்கப்பட்டதாக மக்கள் கூறியுள்ளனர். ஆனாலும் சில மணித்தியாலங்களில் சீனி முடிவடைந்து விட்டதாகவும் மேலும் 60 பேருக்கு மாத்திரம் சீனி வழங்கப்படும் என சதொசவின் காவலாளி தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசை திட்டிதீர்த்தனர். இதேநேரம் சுமார் 100 பேருக்கு மாத்திரம் சீனி வழங்கப்பட்டிருக்காலம் எனவும் அதன்படி ஒருவருக்கு ஒரு கிலோ எனும் அடிப்படையில் பார்த்தாலும் 2 மூட்டைகள் மாத்திரம் விநியோகிக்கப்பட்டிருக்கும் எனவும் மக்கள் கூறியுள்ளனர்.
மக்களின் ஆதங்கம்
ஒரு சதொச நிலையத்திற்கு இரு சீனி மூட்டைகளா அரசு அனுப்புகின்றது என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை சிலருக்கு அளவுக்கதிமாக சீனி விநியோகம் இடம்பெறுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பில் மக்கள் மேலும் கூறுகையில், ஒருவர் அளவுக்கதிமாக சீனி கொள்வனவு செய்துள்ளதாகவும் அவர் சதொச நிலையத்தில் இருந்து வெளிவருகையில் அவரது பையை பார்வையிட மக்கள் எத்தணித்த நிலையில் குறித்த நபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என கூறியுள்ளார்கள்.
சதொச நிலையம் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் முறைப்பாடுகளையும்
மக்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் முறையான நடவடிக்கை
எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.