தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் ரணிலைத் தவிர வேறு தெரிவுகள் இல்லை
தென்னிலங்கை அரசியல் நிலவரம் சூடுபிடித்த தகவல்களுடைய வாரமாக இவ்வாரத்தினை மாற்ற ஆரம்பித்திருக்கின்றது.
அமைச்சரவை அந்தஸ்தா? அமெரிக்க பிரசாவுரிமையா? என கோரிய சந்தர்ப்பத்தில் அமெரிக்க பிரசாவுரிமை என கூறிய பசில் ராஜபக்ச நாட்டுக்கு மீளவும் திரும்பி வந்திருக்கின்றார்.
''மென்ன கபுடா ஆவா, காவா, கீயா''
இவரது வரவு பற்றி உறவினர் உதயங்க வீரதுங்க பல்வேறு சர்ச்சைக்குரிய விடயங்களை தெரிவித்து பெரியதொரு வரவேற்புடன் வருகை இடம்பெறும் எனத் தெரிவித்திருந்தார்.
மாறாக மொட்டுவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மென்ன கபுடா ஆவா, காவா, கீயா எனக்கூறி பசிலின் மீள்வருகை தொடர்பில் தனது பயம் என்ற நிலையைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஒரு சாதாரண வருகையில் பசில் மீளவும் நாட்டுக்குள் நுழைந்திருக்கின்றார். இவருக்கு எதிர்க் கட்சிகளில் இருந்து மேற்கொள்ளப்படும் எதிர்ப்புக்களைகாட்டிலும் அவரது ஆளும் தரப்பில் இருந்தும் குடும்பத்தில் இருந்தும் முன்வைக்கப்படும் எதிர்ப்புக்களே மிகவும் பிரதானமானவைகளாக மாறியுள்ளது.
மனைவி சட்டத்தரணி புஸ்பா ராஜபக்சவின் விண்ணப்பத்தில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சென்றவர்.
தற்போது எழுபத்தியிரண்டு வயதுடையவரும், 1997 அமெரிக்க கிரீன் காட் லொத்தர் வீசாவை மனைவியான சட்டத்தரணி புஸ்பா ராஜபக்சவின் விண்ணப்பத்தில் தெரிவுசெய்யப்பட்டு குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சென்றவரும், தற்போது அமெரிக்கா, இலங்கை இரட்டைப்பிரசாவுரிமையுடையவரும், அமெரிக்க வாழ் பிள்ளைகள் மூவரில் இருபெண் பிள்ளைகளுக்கும் முறையே இந்திய மற்றும் அவுஸ்ரேலிய நாட்டுக்கார மணமக்களுக்கு மணம்முடித்துக் கொடுத்தவரும், ஆண்பிள்ளைக்கு இலங்கையில் பெண் எடுத்தவரும் ஆகிய பசில் ராஜபக்ச தேசப்பற்றுடன் மீளவும் தாய்நாடு திரும்பியிருக்கின்றார்.
1977 இல் சிறீலங்கா சுதந்திரக்கட்சியுடன் தந்தையின் அரசியலில் ஆரம்பித்தவர் ஐக்கிய தேசியக் கட்சியிலும் சிறிதுகாலம் அரசியல் செய்திருக்கின்றார். இன்றைய காலகட்டத்தில் பொதுஜன பெரமுனவின் நிறுவுனர், தேசிய அமைப்பாளர் எனக் கொண்டாடப்படுகின்றார்.
அரசியலைமைப்பினை மாற்றுவது சிறந்ததும் தனக்கு இலகுவானது
இரட்டைப்பிரசாவுரிமையை விடுவிப்பதைவிடவும் இலங்கையின் அரசியலைமைப்பினை மாற்றுவது சிறந்ததும் தனக்கு இலகுவானதும் எனகருதி அண்ணனின் அனுசரணையுடன் மாற்றம்செய்து ஆட்சிசெய்த பசில் ராஜபக்ச 2024 தேர்தல்கள் தொடர்பில் இலங்கையின் தீர்மானம் மிக்க சக்தியாக இருப்பார் என தென்னிலங்கை அப்பாவி வாக்காளர்கள் நம்புவதனை இவ் அனுபவத்தினால் தவிர்க்கமுடியாததாகின்றது.
கடந்தகால இச் செயற்பாட்டுக்கு நாட்டின் புத்திஜீவிகளான பேராசிரியர்கள், கலாநிதிகளது உடன்பாட்டுடனேயே இவ் அரசியலமைப்பு மாற்றங்கள் பசிலுக்காக மேற்கொள்ளப்பட்டு ஆட்சி செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு என்ற நாட்டின் கீர்த்தி நாமத்தினை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்ற அளவிற்கு ஜனநாயக விழுமியங்களை கடந்த காலங்களில் அச்சுறுத்தியுள்ளார்.
மிக மிக மலினமான நிலைக்கு மலிவான அரசியல்வாதிகளாக ராஜபக்சவினர்
பசிலின் செயற்பாடுகளினால் நாடு வங்குரோத்து அடைந்த நிலை ஒருபுறம் ராஜபக்ச குடும்பம் சிதறுண்டது மறுபுறம் என பலதாக்கங்கள் உருவாகியிருக்கின்றன. பசிலின் செயற்பாடுகள் காரணமாக மிக மிக மலினமான நிலைக்கு மலிவான அரசியல்வாதிகளாக ராஜபக்சவினர் மாறியுள்ளனர் என்பது நிதர்சனமானது.
குடும்ப விடயங்களுக்காக தனிலும் கோட்டாபயவுடன் பசில் மற்றும் அவரது குடும்பத்தினர் உறவுகளைப் பாராட்டுவதோ கொண்டாடுவதோ கிடையாது, மகிந்த குடும்பத்தில் மகிந்தவையும் நாமலையும் தவிர கோட்டபாயவுடன் குடும்பரீதியாக உறவுபாராட்டுபவர்கள் யாரும் கிடையாது அதே போன்று நன்மை தீமைக்கு கூட பசிலுடன் மகிந்த மற்றும் நாமல் தவிர்ந்த ஏனைய யாரும் மகிந்த குடும்பத்திலிருந்து கொண்டாடுவது கிடையாது. இவ்வாறு படுசிக்கலான உறவுபாராட்டுதல் முறைக்குள் பிரவேசித்திருக்கின்றது ராஜபக்ச குடும்பம்.
ஒரு காலத்தில் தம்பிஉடையான் படைக்கு அஞ்சான் என்ற நிலையில் மகிந்த, கோட்டாபய, சாமல், பசில், நாமல், சசீந்திர, யோசித, நிபுண ரணவக்க, ஐானக வக்கும்புர ,தாரக பாலசூரிய என பெருங்குடும்பத்தினையே ஆட்சிக்காக உள்வாங்கிய ஒரு நிலை இன்று தென்னிந்திய தமிழ் தொடர்நாடக குடும்பங்கள் போன்றதொரு நிலையிலேயே காணப்படுகின்றது.
நாமலது தலைமைத்துவம் தொடர்பில் கட்சிக்குள்ளேயே ஏற்பு மனநிலை இல்லை
ஒரு தந்தையாக மகனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நாமலுக்கு மகிந்த செய்யவில்லை என்பதே நாமலது நிலைப்பாடாகும், தந்தை சரியாக செய்து முன்னெடுத்தார் மாறாக ஏனைய சகோதரர்களது செயற்பாடுகளே தனது நேரடி அரசியல் வாழ்க்கையை பாதித்துள்ளது என நாமல் ராஜபக்ச வெதும்பிவருகின்றார்.
நாமல் எவ்வாறாயினும் பெரமுனவின் பிரசன்னத்தில் தன்னை நிலைநிறுத்த மிகவும் கடினப்பட்டுவருகின்றார். கோட்டாபய காலம் வரைக்கும் பசில், பீபி ஜெயசுந்தர, அஜித் நிவாட் கப்ரால் ஆகியவர்கள் மேற்கொண்ட மோசடிகள் மற்றும் அறிவீனமற்ற செயற்பாடுகளால் நாடு பொருளாதாரரீதியில் படுகுழியில் வீழ்ந்தது.
இதன் தொடர்ச்சியாக யாரால் கொண்டாடப்பட்டார்களோ யாரால் நிறுவப்பட்டார்களோ அதே மக்களால் ஆட்சியில் இருந்து கோட்டாபய அகற்றப்பட்டார், மக்களது ஆக்குரோச உச்சமாக டீஏ ராஜபக்சவின் சிலைகூட வீழ்த்தப்பட்டது.
தந்தை கோலோச்சிய காலத்தில் நாமலது முன்னளிப்பில் அரசியலில் முக்கியத்துவத்துடன் நுழைக்கப்பட்ட பல இளம் அரசியல்வாதிகள் தற்போது நாமலுடன் தொலைபேசியில் கூட உரையாடுவதில்லை. காஞ்சன விஜயசேகர, டீவி சாணக்க, சாரதி துஸ்மந்த, நிமால் லான்சா ஆகியவர்கள் தற்போது ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு ரணிலுடன் சேர்ந்துவிட்டார்கள். இதுவே நாமலது தலைமைத்துவம் தொடர்பில் கட்சிக்குள்ளேயே ஏற்பு மனநிலை இல்லை என்பதை காண்பிக்கின்றது.
நிதிஅமைச்சினை நிர்வகிக்க தகுதி அல்லது தராதரம் அவசியம் இல்லை
இவ்வாறானதொரு சூழலில் எப்படி நாமலை மக்களது தலைமைத்துவ பதவிக்கு சவாலாளராக்குவது என்ற யதார்த்தம் மேலோங்கி இருக்கின்றது. பசிலிடம் நிதிஅமைச்சினை நிர்வகித்த உங்களிடம் இருக்கும் தகுதி அல்லது தராதரம் என்ன என்று ஒரு ஊடகவியலாளர் வினவியதற்கு தனக்கு இதற்கு பதில்சொல்லவேண்டிய அவசியம் இல்லை எனவும் எதிர்கால அரசுக்கள் கல்வி அறிவுடையவர்களை நியமிப்பது சிறப்பானது எனவும் தெரிவித்தார்.
நிலைதடுமாறி காணப்படும் பொதுஜன பெரமுனவின் எதிர்கால பயணத்திற்கு இருக்கும் ஒரேயொரு நம்பிக்கையும் தெரிவும் ரணில் விக்கிரமசிங்க தவிர வேறுயாரும் இல்லை என்பதை ரணிலுடனான சந்திப்புக்கள் உறுதிப்படுத்துகின்றது. ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு பின்னரும் ஒரு ஆசனம் கிடைக்காது விட்டாலும் ரணிலால் நாட்டினை ஆட்சிசெய்ய முடியும் என்பதை ஐக்கிய தேசிய கட்சி நம்புகின்றது.
தென்னிலங்கை மக்களது எதிர்காலத்திற்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகளது எதிர்கால வாழ்க்கைக்கும் ரணிலைத் தவிர வேறு தெரிவுகள் இல்லை. மிகவும் இலாவகமாக காலத்தினைக் கணிப்பிட்டு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஸ்திரப்படுத்தி நகர்கின்றார் ரணில் குறைந்த பட்சம் ஒரு தனி நாடாளுமன்ற ஆசனத்துடன் ஜனாதிபதி பதவியை பிடித்து ஆண்டுவருகின்றார்.
இந்த சூழ்நிலையை நன்கு உணர்ந்த ஐக்கிய மக்கள் சக்தி முதலில் பொதுத் தேர்தல் நடாத்தப்படவேண்டும் என்றதொரு கருத்துருவாக்கத்தினை நளின் பண்டார, புத்திக்க பத்திரண, கர்சண ராஜகருணா சில மாதங்களுக்கு முன்னரே ஆரம்பித்து மக்களது ஜனநாயக உரிமையை இவ் அரசு பறிக்கின்றது என கருத்துரைக்க ஆரம்பித்தனர்.
ஜனாதிபதி தேர்தல் முதலில் நடைபெறும் அதில் ரணில் விக்கிரம சிங்க வெற்றிபெற நிறைவான வாய்ப்புக்கள் உள்ளது. அத் தேவை ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் கூட்டு கட்சிகள் மற்றும் பாதிக்கு மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகளின் நிழல் ஆதரவும் கிடைக்கும். இச் சூழலில் இன்னும் பல சந்திப்புக்கள் தொடர்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |