திருகோணமலை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 1911 குடும்பங்களை சேர்ந்த 6617 பேர் பாதிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 1911 குடும்பங்களைச் சேர்ந்த 6617 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன்தர்சன பாண்டிகோராள தெரிவித்துள்ளார்.
இவர்களுள் அதிகபட்சமாக பட்டினமும், சூழலும் பிரதேச செயலகப்பிரிவில் 1104 குடும்பங்களை சேர்ந்த 3849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1380 குடும்பங்களைச் சேர்ந்த 4829 பேர் உறவினர் வீடுகளில் தங்கியிருந்ததுடன், மொத்தமாக 4 வீடுகள் முழுமையாகவும், 43 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட வீடுகளது இழப்புக்கள் பிரதேச செயலகம் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு உரிய அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும், முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு 10000 ரூபா முற்பணம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க அதிபருடன் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மாவட்ட செயலகப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் கே.சுகுணதாஸ் உட்பட அதிகாரிகள் பலர் வெள்ளநீர் தேங்கிய குடிமனை சார் பிரதேசங்களில் நீரை வெளியேற்ற கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.