நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய தீர்மானம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஐந்து வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் புதிய தபாலக காரியாலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நேற்று(18.09.2025) பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“30 வருடங்களாக அரச சொத்துக்களையும், இடங்களையும், பாவித்து கொண்டிருந்த தலைவர்கள் அவர்களுடைய சொந்த வீடுகளுக்கு போய்க் கொண்டிருக்கின்றார்கள்.
டொலர் மற்றும் முதலீடுகள்
ஐந்து வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு கிடைக்கின்ற ஓய்வூதியம் இரத்து செய்யப்படும். அது சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
ஜனாதிபதி, நாட்டை பொறுப்பேற்று ஒரு வருடத்தை கடக்கின்ற இந்த நிலையில், நாட்டில் அதிக அளவு மாற்றங்கள் நடைபெற்று இருக்கின்றன. அது மக்களுக்கு விளங்கியுள்ளது.
நாங்கள் இந்த நாட்டைப் பொறுப்பேற்கின்ற போது, நாடு வாங்குறோத்து அடைந்த நிலையிலே காணப்பட்டிருந்தது. ஆனால் இப்போது மத்திய வங்கி உள்ளிட்ட பல நிறுவனங்களில் டொலர் மற்றும் முதலீடுகள் பெருகி இருக்கின்றன.
பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, உள்ளிட்ட அவரது கட்சியினர் தெரிவித்திருந்தார்கள். எங்களுடைய செயற்பாடுகள் காரணமாக இந்த பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்பதை நாங்கள் மக்களுக்கு காட்டியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



