நடமாடும் வியாபாரத்திற்கு தடை விதித்த பருத்தித்துறை பிரதேச சபை
அமைதியாக இடம்பெற்ற பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் அனுமதியற்ற நடமாடும் வியாபாரத்திற்கு தடை விதிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபையின் அமர்வு அதன் தவிசாளர் உதயகுமார் யுகதீஷ் தலைமையில் இன்று(22.04.2026) 10:30 மணியளவில் பருத்தித்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த மண்ணிற்காக மரணித்த மக்கள், மற்றும் மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி ஆரம்பமான சபை அமர்வில், முதலாவதாக கடந்த கூட்டம் அறிக்கை வாசிக்கப்பட்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அறிக்கை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பாட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு உறுப்பினர்களும் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தவிசாளர் அறிவுறுத்தியுள்ளார்.
எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
மக்களின் குடிநீர் கோரிக்கைகளுக்கு குடிநீரை வழங்கும்போது பணம் பெற்று வழங்குவதென்றும், 2008 ஆம் ஆண்டு நிஷா புயல் ஏற்பட்டபோது குடத்தனை உப அலுவலகத்தில் அழிந்து போன நூற்றுக்கணக்கான புத்தகங்களை அழிந்து போனதாக ஏற்றுக்கொள்வது என்றும், கட்டிட அனுமதி வழங்குதல் தொடர்பான விடயங்களும், பகல் வேளையில் ஒளிரும் மின் விளக்குகளை நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது என்றும், தழுவல் அனுமதிகள் தொடர்பாகவும், சுடுகாடுகளில் தகனம் செய்யப்படுகின்ற அல்லது புதைக்கப்படுகின்ற போது ரூபா 2000 நிதி அறவீடு செய்வதென்றும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஒவ்வொரு சுடுகாடுகள், இடுகாடுகளுக்கும் நிர்வாகங்கள் அமைப்பது என்றும், புதிய மின்விளக்குகளை பொருத்துவது, பழுதடைந்த மின் விளக்குகளை திருத்துவது தொடர்பாகவும், தற்போதைய எரிபொருள் விலை ஏற்றம் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு சமூக மட்ட அமைப்புகளுக்கு ஊடாக செய்யக்கூடிய புனரமைப்பு வேலைகளை மேற்கொள்வதென்றும், தீர்மானிக்கப்பட்டதுடன், சபைக்கு அனுப்பப்பட்ட முறைப்பாடுகள், எடுக்க நடவடிக்கைகள் தொடர்பாகவும் சபையில் ஆராயப்பட்டன.
மேலும், அனுமதியற்ற நடமாடும் வியாபாரத்தை தடை செய்வதென்றும், இதுவரை பதிவு செய்யப்படாத வீதிகளை ஒரு வாரத்திற்குள் பதிவு செய்வதற்குரிய நடவடிக்கை எடுப்பது என்றும் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இதேவேளை, சபையில் உப குழுக்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கும் சபை அனுமதி வழங்கியுள்ளது.
இன்றைய அமர்வில் 20 உறுப்பினர்களில் 19 உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இன்றைய சபை அமர்வில் சபையில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை விரைந்து நடைமுறை படுத்துவதில்லை என பல உறுப்பினர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடு! அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு