பருத்தித்துறை மரக்கறி சந்தை மற்றும் வடிகாலமைப்பு விவகாரம் குறித்து பலத்த வாதப்பிரதிவாதங்கள்..!
பருத்தித்துறை நகரசபையில் மரக்கறி சந்தை விவகாரம் மற்றும் மரக்கறி சந்தை வடிகால் அமைத்தல் தொடர்பாக சபையில் பலத்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து நிதி தொடர்பாக கணக்காளரின் ஆலோசனையை பெறுவதற்காக சபை சில நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு கணக்காளருடன் பல்வேறு விடயங்கள் ஆலோசிக்கப்பட்ட பின்னர் மீண்டும் சபை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நகரசபை தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலமையில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
தீர்மானங்கள் நிறைவேற்றம்
தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமான குறித்த அமர்வில் மழைகாலத்திற்கு முன்னர் வடிகால்கள் அமைத்தல், சீர்செய்தல், பொது இடங்களில் வெடி கொழுத்துவதை தடை செய்தல், வளர்ப்பு மற்றும் கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை செய்தல், கட்டாக்காலி நாய்களை பிடித்து கருத்தடை செய்வதற்கு கொடுப்பதற்கு ரூபா 600 நிதி வழங்குதல், பருத்தித்துறை நகரசபைக்கு சட்ட ஆலோசகர் ஒருவரை நியமித்தல், திண்ம கழிவகற்றல் கட்டணம் தொடர்பாக பருத்தித்துறை பிரதேசசபைக்கு கோரிக்கை கடிதம் அனுப்புதல், வியாபார உரிமம் பெறாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், சபையால் வழங்கப்படும் விசேட அனுமதிகள் தொடர்பான தீர்மானங்கள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்துடன் நகரசபையால் மேற்கொள்ளப்பட்ட வீதி மற்றும் வடிகால் அமைப்பில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாகவும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.



