பிரஜாசக்தி நியமனத்தை எதிர்க்கும் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர்
அரச உத்தியோகத்தர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினால் தான் பிரஜாசக்தியை கொண்டு வந்தோம் என பருத்தித்துறை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்தால் சபையில் களேபரம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை பிரதேச சபையின் இந்த வருடத்திற்கான முதல் அமர்வு நேற்று(28.01.2026) தவிசாளர் யுகதீஸ் தலைமையில் பருத்தித்துறை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கண்டனம் தெரிவித்த சபை
இதன்போது, முதலாவது பிரேரணையாக அரசாங்கத்தின் பிரஜாசக்திக்கு எதிராக தவிசாளரால் சபையில் கொண்டுவரப்பட்டது.

இதற்கு எதிராக வாதிட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், “அரச ஊழியர்கள் அரசாங்கத்திற்கு உண்மையாக இல்லை, அவர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினால் தான் இந்த பிரஜா சக்தியை கொண்டு வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.
இதனால் சபையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது. குறித்த உறுப்பினரின் கருத்திற்கு தவிசாளர் உட்பட ஏனைய உறுப்பினர்கள் தங்களுடைய வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, தவிசாளரால் கொண்டுவரப்பட்ட குறித்த பிரேரணை தமிழரசுக் கட்சியின் 9 வாக்குகளாலும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு வாக்குமாக 10 வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.