பேர்ல் கப்பலின் தீப்பரவல் அனைத்து துறைகளுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு
எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் காரணமாக சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதாரம் ஆகிய அனைத்து துறைகளுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் விஞ்ஞான ஆய்வு மற்றும் முறையான கடலோர, கடல் சூழல் மற்றும் சமூக வாழ்க்கைக்கு ஏற்பட்ட சேதம் குறித்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜேவிபி கோரியுள்ளது.
இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து முறையான இழப்பீடு பெற்ற பின்னர் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கடலோர, கடல் சூழலுக்கும் சமூக வாழ்க்கைக்கும் ஏற்பட்ட சேதம் குறித்து முறையான மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நிலைமை காரணமாக மீன்பிடி சமூகம் நெருக்கடியில் உள்ளது. அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை 5,000 ரூபாவை வழங்கி ஈடு செய்ய முடியாது.
விற்பனையாளர்கள் மற்றும் மீன்பிடித் தொழிலால் மறைமுகமாக பயன் பெற்றவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை மதிப்பிடுவதற்கு முறையான மதிப்பீடு அவசியம்.
இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறியதால் அமில மழை, கடல் நீர்
மாசுபடுதல் மற்றும் காற்று மாசுபாடு போன்ற ஆபத்துகளைத் தடுக்க அரசாங்கம்
தவறிவிட்டது என்று விஜித ஹேரத் குற்றம் சுமத்தினார்.