மகிந்த –பாட்டலியின் கூட்டுக் கொள்ளை : வெளியாகியுள்ள தகவல்கள்!
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று மின்சக்தி தொடர்பில் தான் ஒரு நிபுணர் என்ற வகையில் மின்னுற்பத்தி மற்றும் நிலக்கரி இறக்குமதி தொடர்பில் வீரவசனம் பேசுபவர் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் அவர் அமைச்சராக இருந்த காலத்தில் ஏற்பட்ட பாரிய நட்டம் தொடர்பிலான தகவல்கள் வெளிவந்துள்ளன.
இலங்கை மின்சார சபை இலாபத்தில் இயங்கி வந்த போதிலும் மகிந்த ராஜபக்சவின் ஆரம்பக்கால ஆட்சியில் அது பாரிய நஷ்டத்தில் இயங்கியமை அம்பலமாகியுள்ளது.
கோப்(COPE) குழுவின் அறிக்கை
கோப் (COPE)குழுவின் தலைவராக டியூ குணசேகர இருந்தபோது 2013 ஜூலை 23 அன்று வெளியிடப்பட்ட குழு அறிக்கையில் இந்தத் தகவல்கள் வௌியாகியுள்ளன.
2010ஆம் ஆண்டில் 4,831,985,000 ரூபா (4.831 பில்லியன் ரூபா) இலாபம் ஈட்டியிருந்த மின்சார சபை 2011ஆம் ஆண்டில் 19,265,543,000 ரூபா (19.265 பில்லியன் ரூபா) என்ற பாரிய நஷ்டத்தை ஒரே வருடத்திற்குள் அடைந்துள்ளது.

அதாவது 2010ஆம் ஆண்டில் 483 கோடி ரூபாவிற்கும் அதிகமாக இருந்த இலாபம் ஒரே வருடத்திற்குள் 1,926 கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டமாக மாற்றப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் அரச நிறுவனங்கள் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்படுவது போன்ற ஊழல் மோசடிகளுக்கு எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
2010ஆம் ஆண்டு முதல் 2013 ஜூன் இறுதி வரை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக பாட்டலி சம்பிக்க ரணவக்க பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.