மேய்ச்சல் தரை தொடர்பிலான தீர்வுகளை வழக்கின் சரியான உத்தரவுகளை பெற்று தீர்த்துக்கொள்ளலாம் - எம்.ஏ.சுமந்திரன்
மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை உயர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மாதவனை,மயிலத்தை மடு மேய்ச்சல் தரை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டது.
பால் பண்ணையாளர்களை நம்பி தொடர்ந்து தங்களுடைய நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் வாழ்கின்றன என்றும், மகாவலி அபிவிருத்தி சபையினாலும், வேறு அரச நிறுவனங்களினாலும் வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகளை கொண்டு வந்து சோளம் பயிர்ச் செய்கைக்காக நிலம் கொடுக்கபட்டதனை தடுப்பதற்காகவும், அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதிகளில் ஒருவர் மாத்திரம் பிரசன்னமாகி இருந்தார். ஏனைய ஐந்து பிரதிவாதிகள் பிரசன்னமாகி இருக்கவில்லை. மீண்டும் அவர்களுக்கு அறிவித்தல் கொடுத்து பெப்ரவரி 26 திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேய்ச்சல் தரை சம்பந்தமான அனைத்து விடயங்களும் இந்த வழக்கில் சரியான உத்தரவுகளை பெற்று தீர்த்துக் கொள்ளலாம் என நம்புகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்போது மனுதாரர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் , கோவிந்தன் கருணாகரன் , தவராசா கலையரசன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.









