40 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முயன்ற மதப் போதகர் பலி: கிழக்கு ஆபிரிக்காவில் சம்பவம்
வேதாகமத்தில் கூறப்பட்டதைப் பின்பற்றி 40 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த மதப் போதகர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கிழக்கு ஆபிரிக்காவின் மொசாம்பிக் (Mozambique) நாட்டில் இடம்பெற்றுள்ளது.
சாண்டா ட்ரிண்டேட் எவாஞ்சலிகல் (Santa Trindade Evangelical) தேவாலயத்தின் நிறுவுனர் பிரான்சிஸ்கோ பராஜா (Francisco Barajah) என்பவரே இவ்வாறு இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 நாட்கள் உணவு, தண்ணீர் இல்லாமல், அவரால் எழுந்து நிற்க முடியாத அளவுக்கு உடல் எடை குறைந்துள்ளது. இதனையடுத்து, உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வற்புறுத்தலின் பேரில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
செரிமான உறுப்புகள் செயலிழப்பு
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கடுமையான இரத்த சோகை மற்றும் அவரது செரிமான உறுப்புகளின் செயலிழப்பு போன்ற இன்னலுக்கு உள்ளாகியுள்ளாரெனக் கண்டறிந்துள்ளனர்.
திரவ உணவுகளை அவருக்கு வழங்க முயற்சித்தபோதும் இறுதியில் அவர் உயிரிழந்துள்ளார்.
சாண்டா ட்ரிண்டேட் தேவாலயத்தின் உறுப்பினர்கள், போதகரும் அவரைப் பின்பற்றுபவர்களும் உணவுத் தவிர்ப்பில் ஈடுபடுவது பொதுவானது, ஆனால் நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளப்படுவதில்லை என்று தேவாலயத்தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
வேதாகமத்தின் 'மத்தேயு' நற்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளபடி, பாலைவனத்தில் கிறிஸ்துவின் 40 நாள் உணவுத்தவிர்ப்பை பின்பற்றுவதற்கான இத்தகைய முயற்சி இது முதல் தடவையாக மேற்கொள்ளப்படவில்லை.
2015ஆம் ஆண்டில், சிபாப்வேயைச் சேர்ந்த ஒருவர் 30 நாட்களுக்குப் பிறகு இறந்துள்ளார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2006ஆம் ஆண்டில், லண்டனில்
இதே போன்ற உணவுத்தவிர்ப்பின்போது ஒரு பெண் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




