சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி தொடர்பில் வெளியான தகவல்
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்தியுள்ளாரா என்பதை கண்டறிய உள்நாட்டு இறைவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெரோம் பெர்னாண்டோவின் தேசிய அடையாள இலக்கமோ அல்லது வேறு எந்த தகவலோ உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
போதகருக்குச் சொந்தமான குளோரியஸ் தேவாலயத்தின் வரி விபரங்கள் தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எவ்வித தகவலும் இல்லையெனவும், Glorious Dome தேவாலயத்திற்கு வரிச்சலுகை எதுவும் வழங்கப்படவில்லை எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் வெளியிட்ட தகவல்
அதன்படி, உள்நாட்டு வருவாய் சட்டத்தின் கீழ் அவர்கள் தங்கள் சொத்துக்களை வெளியிட வேண்டும். அரசு பதிவு செய்யப்பட்ட கோவில்களுக்கு வரி விலக்கு உண்டு. வரி விலக்குக்கு பதிவு மட்டும் போதாது. அதற்கென தனி அரசாணை உள்ளது, அந்த விதிக்கு உட்படாத மத ஸ்தலங்கள் வரி செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெரோம் பெர்னாண்டோ அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன், அவர் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அவர் இலங்கை திரும்பியதும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வு ஒன்றிற்காக வெளிநாட்டில் இருப்பதாகவும் நேற்றையதினம்(21.05.2023) நாட்டுக்கு வருவதாகவும் அறிவித்திருந்த நிலையில் அவர் இதுவரையில் நாட்டை வந்தடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் கட்டுநாயக்கவில் உள்ள அவரது ஆலயமான மிராக்கிள் டோம் மண்டபத்திற்கு முன்னதாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |