நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பிற்கு முன்னாள் ஆட்சியாளர்களே பொறுப்பு
நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமைக்கு முன்னாள் ஆட்சியாளர்களே பொறுப்பு என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஆளும் கட்சியின் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜாய்சிங்க இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஹட்டன் தொழில் திணைக்களத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிப்போருக்கு குற்றவாளிகளுடன் எவ்வித தொடர்பும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் குற்ற கும்பல்களுடன் தொடர்பு பேணியதாகவும் அதன் காரணமாகவே குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து செல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் நாட்டில் இடம் பெற்று வரும் குற்ற செயல்களையும் போதைப் பொருள் வர்த்தகத்தையும் இல்லாது ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் சில சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாடுடன் பெருந்தோட்ட தொழிலாளர்களது நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.



