முல்லைத்தீவில் கடவுச்சீட்டு புகைப்படச் சேவை முடக்கம்! நடவடிக்கை எடுக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து
முல்லைத்தீவு மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு புகைப்படக் கலையக சேவை கடந்த மூன்று ஆண்டுகளாக முற்றாக செயலிழந்துள்ள நிலையில் அதனை சரியாக நடைமுறைப்படுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்றையதினம்(31) அனுப்பியுள்ள விரிவான கடிதத்தில், இலங்கை முழுவதும் 1,420 அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு புகைப்படக் கலையகங்கள் இயங்கும் நிலையில், புவியியல் ரீதியாக பரந்த பரப்பைக் கொண்ட ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்ட கலையகம் மட்டுமே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அந்த ஒரே அங்கீகரிக்கப்பட்ட கலையகமான "சதீஸ் ஸ்டூடியோ & டிஜிட்டல் கலர் லாப்" கூட கடந்த மூன்று ஆண்டுகளாக சேவையாற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது, மாவட்ட மக்களை முற்றாக இச்சேவையிலிருந்து விலக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய தீர்வு
குறித்த கலையகத்தின் உரிமையாளர் கடந்த மூன்று ஆண்டுகளாக திணைக்களத்திற்கு பலமுறை மின்னஞ்சல் மூலம் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக உதவிகளை கோரி விண்ணப்பித்தும், இதுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை என தகவல் கிடைத்துள்ளதாகவும், இதன் விளைவாக கலையகத்தின் அங்கீகரிக்கப்பட்ட சேவையை மீள ஆரம்பிக்க முடியாமல் உள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு தேவையான இலத்திரனியல் புகைப்படம் அங்கீகரிக்கப்பட்ட கலையகங்கள் ஊடாக மட்டுமே திணைக்களத்தின் கணினி முறைமைக்கு அனுப்பப்பட வேண்டியிருப்பதால், முல்லைத்தீவு மக்கள் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், இதனால் கூடுதல் பயணச் செலவு, கால விரயம் மற்றும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் ரவிகரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.



ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri